[X] Close

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலை; 50 டிகிரி செல்சியஸைத் தாண்டி ராஜஸ்தான் முதலிடம்- இந்தியா முழுவதும் என்ன நிலை?


50

  • kamadenu
  • Posted: 03 Jun, 2019 11:58 am
  • அ+ அ-

நாட்டிலேயே அதிகபட்ச வெப்பநிலையாக ராஜஸ்தானின் சுருவில் 50 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நேற்று பதிவாகி உள்ளது.

 

இந்த வார இறுதியில் இந்திய நகரங்கள் பலவற்றில் 45 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெயில் பதிவானது. ராஜஸ்தானின் சுரு பகுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வெயில் 50 டிகிரியைத் தாண்டியது. நாட்டின் அதிக வெப்பமான பகுதி என்ற பெயரைப் பெற்றது.

அனல் காற்று காரணமாக ராஜஸ்தானில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். கங்காநகர், பிகானர், ஜெய்சல்மர், கோட்டா, பார்மர் ஆகிய நகரங்களில் முறையே  48.6, 48.1, 47.8, 47.5 மற்றும் 47.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

இதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்திலும் மேற்கு ராஜஸ்தானிலும் சிவப்பு வண்ண எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் சபர்கப்தா மாவட்டத்தின் மெக்ராஜ் தாலுகாவைச் சேர்ந்தவரும் ராஜ்கோட் மாவத்தில் உள்ள ஜெரோம் தாலுக்காவைச் சேர்ந்த மற்றொருவரும் அனல் காற்று வீசியதை அடுத்து உயிரிழந்தனர். அதிக வெப்பம் மற்றும் உடம்பில் நீர்ச்சத்து இழப்பின் காரணமாக 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சுரேந்திரநகரில் வெப்பம் அதிகபட்சமாக 45.3 டிகிரி செல்சியஸாக இருந்தது. மாநிலத் தலைநகர் காந்திநகரில் 45 டிகிரி செல்சியஸில் வெயில் கொளுத்தியது. அதேநேரத்தில் அகமதாபாத் மற்றும் சில நகரங்களில் 43 முதல் 44 டிகிரி செல்சியஸ் வரை வெயில் இருந்தது.

மகாராஷ்டிராவில் விதர்பாவில் 45.5 டிகிரி வெப்பநிலை பதிவானது. இது இன்னும் அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் பாண்டா பகுதியில் நேற்று வெப்பநிலை அதிகமாக இருந்தது. அதிகபட்சமாக அங்கு 47.4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

நாட்டிலேயே இமாச்சலப் பிரதேசத்தில் வெப்ப அலை நேற்று குறைவாகக் காணப்பட்டது. தலைநகர் டெல்லியிலும் வெப்பம் குறைவாகவே இருந்தது. அங்கு அதிகபட்சமாக 42.5 டிகிரி செல்சியஸ் பதிவானது.

இதுகுறித்து வானிலை மைய அதிகாரி ஒருவர் கூறும்போது, ''வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள், கர்ப்பிணிகள் ஆகியோர் அனல் காற்றால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பொதுமக்கள் வெயில் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும்'' என்றார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close