[X] Close

அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு எதிர்க்கட்சியினர் கபாலபதி ஆசனம் செய்வது நலம்: பாபா ராம்தேவ் கிண்டல்


10-15

  • kamadenu
  • Posted: 31 May, 2019 10:17 am
  • அ+ அ-

-ஏஎன்ஐ

எதிர்க்கட்சியினர் மன அழுத்தத்தைப் போக்க அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு கபாலபதி எனும் ஆசனத்தை செய்ய வேண்டும் என கிண்டலடித்துள்ளார் யோகாகுரு பாபா ராம்தேவ்.

நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி நேற்று (வியாழக்கிழமை) 2-வது முறையாகப் பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில், எதிர்க்கட்சியினர் மன அழுத்தத்தைப் போக்க அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு கபாலபதி எனும் ஆசனத்தை செய்ய வேண்டும் என கிண்டலடித்துள்ளார் யோகாகுரு பாபா ராம்தேவ்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய ராம்தேவ், "பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியா பொருளாதார சுதந்திரம் பெறும். கலாச்சார வறுமையிலிருந்து மீளும். கருத்தியல் சார்ந்த பஞ்சம் தீரும்.  வியாழக்கிழமை பதவியேற்ற அமித்ஷா, பியுஷ் கோயல், நிதின் கட்கரி உட்பட அனைவருமே மக்கள் எதிர்பார்ப்புகளுக்கு இணங்க வாழ்ந்தவர்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு அவர்கள் மக்களுக்காக கடினமாக உழைப்பார்கள்.

ஆதலால், எதிர்க்கட்சியினர் மன அழுத்தத்தைப் போக்க அடுத்த 10, 15 ஆண்டுகளுக்கு கபாலபதி எனும் ஆசனத்தை செய்ய வேண்டும் என நினைக்கிறேன்" எனக் கிண்டலாகக் கூறியுள்ளார்.

பிரதமர் மோடியுடன் 58 பேர் அமைச்சர்களாக நேற்று பதவியேற்றனர். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.

இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் சுமார் 6000 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு அரசுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள், பாலிவுட் பிரபலங்கள், தூதரகப் பிரதிநிதிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கபாலபதி ஆசனம் செய்முறை:

முதலில் நேராக நிமிர்ந்து கண்களை மூடிய நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு கைகளையும் முழங்கால்களில் ஊன்றிக் கொள்ள வேண்டும். மூக்கின் இரு துவாரங்கள் வழியாக நுரையீரல் நிரம்பும் வகையில் நன்றாக மூச்சை உள்ளிழுக்க வேண்டும். வயிறு நன்றாக உள்ளிழுத்த நிலையில் இருக்க வேண்டும்.

இப்போது மூச்சு முழுவதும் வேகமாக வெளியே விடவேண்டும். இப்போது வயிறில் ஒரு அழுத்தம் கிடைக்கும். இதேபோல் 5 நிமிடங்கள் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.

பலன்: மனதை அமைதிப்படுத்தி மனப்பதற்றத்தையும் குறைக்கிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close