[X] Close

உ.பி.யின் புதிய எம்.பி.க்களால் காலியான 11 தொகுதிகளின் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தொடரும் மெகா கூட்டணி


11

  • kamadenu
  • Posted: 30 May, 2019 11:18 am
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

உ.பி.யின் 11 எம்எல்ஏக்கள் மக்களவை எம்.பி.யாக வென்றுள்ளனர். இவர்களால் காலியான சட்டப்பேரவை தொகுதிகளில் நடைபெறும் இடைத்தேர்தலிலும் மாயாவதி, அகிலேஷ்சிங் யாதவ் அமைத்த மெகா கூட்டணி தொடர உள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் தனி மெஜாரிட்டியுடன் வென்ற பாஜகவிற்கு உ.பி.யில் 71 தொகுதிகளுடன், 42.63 சதவீத வாக்குகள் கிடைத்திருந்தன. மாயாவதியின் பகுஜன் சமாஜுக்கு (பிஎஸ்பி) 19.77, அகிலேஷின் சமாஜ்வாதிக்கு (எஸ்பி) ஐந்து தொகுதிகளுடன் 22.35 சதவீதமும் கிடைத்தன.

இரண்டு தொகுதிகள் பெற்ற காங்கிரஸ் 7.53 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தது. இதனால், தம் கட்சிகளின் 42.12 சதவீத வாக்குகளுடன் பாஜகவை வீழ்த்திவிட மாயாவதியும், அகிலேஷும் திட்டமிட்டனர்.  இதே தேர்தலில் 2 தொகுதிகளுடன் 7.53 சதவீதம் பெற்ற காங்கிரஸ் சேர்க்கப்படவில்லை. இதற்கு பதிலாக ஒரு தொகுதியும் இல்லாமல் வெறும் .86 சதவீத வாக்குகள் பெற்ற அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் கட்சியை தம் மெகா கூட்டணியில் சேர்த்தனர்.

ஆனால், அவர்கள் இட்டது அனைத்தும் 2019 தேர்தலில் தப்புக்கணக்கு என்றானது. இந்தத் தேர்தலில் எஸ்பியின் வாக்குகள் சேர்ந்ததால் பிஎஸ்பிக்கு பத்து எம்.பி.க்கள் கிடைத்துள்ளனர்.  அதேபோல், பிஎஸ்பியின் வாக்குகள் எஸ்பிக்கு கிடைக்காமல் அதற்கு ஐந்து தொகுதிகள் மட்டுமே கிடைத்தன. இதனால் அதன் எம்.பி.க்களான அகிலேஷின் மனைவி டிம்பிள் யாதவ், ஒன்றுவிட்ட சகோதரர்கள் அக்‌ஷய் யாதவ் மற்றும் தர்மேந்தர் யாதவ் ஆகிய மூவருக்கும் கூட தோல்வி ஏற்பட்டது.

வெற்றி கிடைக்கவில்லை எனினும், ஆர் எல்டியின் வாக்கு சதவீதம் 1.67 என உயர்ந்தது. இதனால், உ.பி.யில் வரும் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி தொடர்வது சந்தேகமே எனக் கருதப்பட்டது.  இது தொடர்பாக தன் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாயாவதி மெகா கூட்டணி தொடரும் எனக் கூறியுள்ளார். இதற்கு அக்கூட்டணியால் அதிக பலனை பிஎஸ்பி பெற்றது காரணமாக உள்ளது.

ஆனால், தனித்துப் போட்டியிட்டு பெற்றதை விட 24,55,347 வாக்குகள் குறைவாகப் பெற்ற அகிலேஷ் மெகா கூட்டணி குறித்து தீர்க்கமான முடிவு எடுக்கவில்லை. மாறாக, உ.பி.யின் 11 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலின் முடிவைப் பார்த்தபின் இறுதி முடிவு எடுக்க எண்ணுகிறார்.

எனவே, மெகா கூட்டணி உ.பி.யில் வரவிருக்கும் சட்டப்பேரவை இடைத்தேர்தலிலும் தொடர உள்ளது. இந்தமுறை மக்களவைத் தேர்தலில் பாஜக ஆளும் உ.பி.யில் அதன் நான்கு மாநில அமைச்சர்கள் உட்பட 8 எம்எல்ஏக்கள் போட்டியிட்டனர்.

இதில் ஏழுபேர் வெற்றி பெற்று ஒருவருக்கு மட்டுமே தோல்வி ஏற்பட்டது. பிஎஸ்பியின் எம்எல்ஏக்களில் இருவரும், சமாஜ்வாதியில் அதன் நிறுவனர்களில் ஒருவரான ஆசம்கானும் எம்.பி.யாகி விட்டனர். இவர்கள் காலிசெய்த 11 தொகுதிகளில் இடைத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

இதில், மக்களவையை போல் காங்கிரஸ் கழட்டிவிடப்படுமா? அல்லது மெகா கூட்டணியில் சேர்க்கப்படுமா என்பது வரும் நாட்களில் தெரிந்துவிடும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close