சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி மரணம்: குஜராத்தில் சிக்கியது போலி மருத்துவமனை!


அகமதாபாத்: குஜராத்தில் போலி மருத்துவமனையை கண்டறிந்து சீல் வைக்கப்பட்டது. அங்கே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்த நிலையில், அதிகாரிகளின் விசாரணையில் அது போலி மருத்துவமனை என்பது தெரியவந்தது.

குஜராத் மாநிலம், அகமதாபாத் மாவட்ட தலைமை சுகாதார அதிகாரி தலைமையிலான குழுவினர், அங்குள்ள பாவ்லா தாலுகா, கேரள கிராமத்தில் 'அனன்யா மல்டி-ஸ்பெஷாலிட்டி’ என்ற மருத்துவமனையில் சோதனை நடத்தினர். இதில், அந்த மருத்துவமனை வேறு சில மருத்துவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்ததும், முழு மருத்துவமனையும் மோசடி நபர்களால் நடத்தப்பட்டதையும் அதிகாரிகள் கண்டறிந்தனர்.

அதைத் தொடர்ந்து அந்த மருத்துவமனைக்கு 'சீல்' வைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மருத்துவமனையில் 24 மணி நேர சேவை வசதிகளுடன் இஎன்டி, யூரோலஜி, தோல் உள்ளிட்ட 10 பிரிவுகள் இயங்கி வந்துள்ளது. இங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து அந்த சிறுமியின் குடும்பத்தினர் வெளியிட்ட வீடியோ மூலம் இந்த விவகாரம் அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

உயிரிழந்த சிறுமியின் பெற்றோர் இது தொடர்பாக கூறுகையில், "எங்கள் மகள் அனுமதிக்கப்பட்டபோது, அவரது உடல்நிலை நன்றாகதான் இருந்தது. இங்கு சேர்க்கப்பட்ட பின்னரே அவரது உடல்நிலை மோசமடைந்தது. மெஹுல் என்பவர் தான் எங்கள் குழந்தையை இந்த மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறினார். பலமுறை கோரிக்கை விடுத்தும், சிறுமியின் மருத்துவ அறிக்கையை தரவில்லை. எங்களிடமிருந்து ரூ. 1.50 லட்சம் கட்டணமும் வசூலித்தனர்" என்றனர்.

இதுகுறித்து அகமதாபாத் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் ஜாட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, "சிறுமியின் மரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதுவரை மருத்துவமனை மீதும், மர்மநபர் மீதும் எந்த புகாரும் போலீஸாருக்கு வரவில்லை" என்றார்.