[X] Close

'250 எம்.பி.க்களுக்கு மேல் கிடைக்கக்கூடாது என கடவுளிடம் வேண்டினேன்': பிரதமர் மோடியைச் சந்தித்த பின் ஜெகன்மோகன் ரெட்டி பேச்சு


250

  • kamadenu
  • Posted: 26 May, 2019 20:17 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சிக்கு 250 தொகுதிகளுக்கு மேல் கிடைக்கக்கூடாது என்று இறைவனிடம் வேண்டினேன் என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

ஆந்திராவில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 தொகுதிகளைக் கைப்பற்றி புதிய முதல்வராக ஒய்எஸ்ஆர் ஜெகன்மோகன் ரெட்டி வரும் 30-ம் தேதி பதவியேற்க உள்ளார். மக்களவைத் தேர்தலிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 25 இடங்களில் 22 இடங்கள கிடைத்துள்ளன.

இந்நிலையில், ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரியும், கடனில் இருந்து ஆந்திராவை மீட்க உதவக் கோரியும் டெல்லியில் பிரதமர் மோடியை, அவரின் இல்லத்தில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சந்தித்தார்.

மீண்டும் பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைத்தமைக்கு ஜெகன்மோகன் ரெட்டி பிரதமர் மோடிக்கு வாழ்த்துதெரிவித்தார்.

ஆந்திராவில் புதிய முதல்வராகப் பதவியேற்க இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவிததார். அதன் பின் பிரதமர் மோடியிடம் ஆலோசனை நடத்தினார்.

jegan.jpg

பிரதமர் மோடியுடான பேச்சுக்குப் பின்,  ஜெகன்மோகன் ரெட்டி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தபோது கூறியதாவது:

''எங்கள் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து கோரியும், கடனில் இருந்து மீட்க உதவக் கோரியும் பிரதமர் மோடியை இன்று கட்சி சார்பில் சந்தித்தேன். சிறப்பு அந்தஸ்தை ஆந்திர மாநிலத்துக்கு வழங்குங்கள் என்று அதிகாரம் செய்யும் இடத்தில், உத்தரவிடும் இடத்தில் இப்போது இல்லை, வேண்டுகோள் மட்டுமே வைத்தேன்.

பெருந்தன்மையுடன் ஆந்திர மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தர பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைத்திருக்கிறேன். தொடர்ந்து வரும் ஆண்டுகளில் பிரதமர் மோடியிடம் எங்கள் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து கேட்டு தொடர்ந்து முயற்சிப்பேன். ஒருநாள் அனைத்தும் நடக்கும்.

மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சி 250 இடங்களுக்கு மேல் பெறக்கூடாது என்று கடவுளிடம் வேண்டினேன். ஒருவேளை பாஜகவுக்கு 250 இடங்களுக்குள்ளாக கிடைத்திருந்தால், சிறப்பு அந்தஸ்துக்கான உத்தரவில் கையொப்பம் பெற்றுவிட்டு பின்னர் நான் ஆந்திராவில் முதல்வராகப் பதவியேற்று இருப்பேன்.

ஆனால், பாஜகவுக்கு 300 இடங்களுக்கு மேல் கிடைத்துவிட்டது. ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 353 இடங்களில் வென்றுள்ளது. இனிமேல் எங்களின் உதவி தேவைப்படாது, வலிமையாக இருக்கிறது பாஜக.

ஆதலால், நாங்கள் வேண்டும் கொடுங்கள் என்று கேட்பதற்கும், உத்தரவிடுவதற்கும் வாய்ப்பு குறைவுதான். ஆனாலும், பிரதமர் மோடியிடம் சென்று எங்கள் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவேண்டிய அவசியத்தை தெரிவித்தேன்.

கடனில் சிக்கியுள்ள மாநிலத்தை மீட்க உதவுமாறு கோரினேன். மாநிலத்தைப் பிரிக்கும் போது ரூ.97 ஆயிரம் கோடி கடன் 5 ஆண்டுகளில் ரூ.2.58லட்சம் கோடியாக உயர்ந்துவிட்டது. வட்டி மட்டும் ஆண்டுக்கு ரூ.20 ஆயிரம் கோடி செலுத்துகிறோம். ஒட்டுமொத்தமாக ஆண்டுக்கு ரூ.40 ஆயிரம் கோடி வட்டி செலுத்துகிறோம். இந்த நிலையை எடுத்துக்கூறி எங்கள் மாநிலத்தை மீட்கக் கோரி உதவி கேட்டேன்.

எங்கள் மாநிலத்தின் கோரிக்கை முழுவதையும் பிரதமர் மோடி அமைதியாக பொறுமையாகக் கேட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. நல்லவிதமாக அனைத்தும் நடக்கும் என நம்புகிறேன்''.

இவ்வாறு ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்தார்.

 

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close