[X] Close

சாரதா சிட்பண்ட் ஊழல்; கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாருக்கு 'லுக்அவுட்' நோட்டீஸ்: சிபிஐ பிடி இறுகுகிறது


  • kamadenu
  • Posted: 26 May, 2019 16:37 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

சாராதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் ஆணையர் ராஜீவ் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்து சிபிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த லுக்அவுட் நோட்டீஸின்படி ராஜீவ் குமார் நாட்டை விட்டு எங்கும் செல்ல முடியாதபடி அனைத்து விமான நிலையங்களிலும் உஷார்படுத்தியுள்ளது சிபிஐ. ஒருவேளை ராஜீவ் குமார் வெளிநாடு செல்வதாக இருந்தால், விமான நிலைய அதிகாரிகள் உடனுக்குடன் சிபிஐக்கு தகவல் அளிப்பார்கள்.

1989-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியான ராஜீவ் குமாருக்கு மேற்கு வங்கத்தில் நடந்த ரூ.2500 கோடி சாரதா சிட்பண்ட் ஊழல் வழக்கில் தொடர்பு இருக்கிறது என்று சிபிஐ குற்றம் சாட்டுகிறது.

சாராதா சிட்பண்ட் வழக்கை விசாரணை செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக ராஜீவ் குமார் இருந்தார். இவரின் தலைமையில் விசாரணை முறையாக நடைபெறவில்லை என்பதால், விசாரணையை சிபிஐக்கு நீதிமன்றம் மாற்றியது.

ராஜீவ் குமார் சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவராக இருந்தபோது, வழக்கின் விசாரணை தொடர்பான ஆதாரங்களான செல்போன், லேப்டாக், ஆவணங்கள் ஆகியவற்றை அழித்துவிட்டதாக சிபிஐ குற்றம் சாட்டியது.

இது தொடர்பாக ராஜீவ் குமாரின் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் சிபிஐ அதிகாரிகள் தேடுதல் நடத்த முயன்றபோது கொல்கத்தா போலீஸாருக்கும், சிபிஐக்கும் மோதல் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து முதல்வர் மம்தா பானர்ஜி ராஜீவ் குமாருக்கு ஆதரவாகவும், சிபிஐ அமைப்பைக் கண்டித்தும் உண்ணாவிரதம் இருந்தார்.

இதையடுத்து ராஜீவ் குமாரை விசாரணைக்கு ஒத்துழைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனுத் தாக்கல் செய்தது. உச்ச நீதிமன்றத்தின் மனுவை ஏற்று சிபிஐ விசாரணைக்கு ராஜீவ் குமார் ஆஜராகினார். ஆனால், விசாரணையில் சிபிஐக்கு ராஜீவ் குமார் ஒத்துழைக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், ராஜீவ் குமாரைக் கைது செய்ய விதித்திருந்த தடையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் விலக்கிக்கொண்டு, சட்டப்படி சிபிஐ செயல்பட அனுமதி வழங்கியது. அதேசமயம், ராஜீவ் குமார் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் என உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து ராஜீவ் குமார் தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது.

இந்த சூழலில் ராஜீவ் குமாருக்கு இன்னும் முன் ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால், தகுந்த ஆதாரங்களுடன் ராஜீவ் குமாரைக் கைது செய்ய காத்திருக்கிறது. இதனால், வெளிநாட்டுக்கு ராஜீவ் குமார் தப்பிவிடுவார் எனக் கருதி சிபிஐ ராஜீவ் குமாருக்கு லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதன்படி, நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டுள்ளன. ராஜீவ் குமார் வெளிநாடு செல்ல முயன்றால் அதைத் தடுக்கும் வகையில், உடனடியாக அதுகுறித்து சிபிஐக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close