[X] Close

15 ஐஎஸ் தீவிரவாதிகள் ஊடுருவல்: கேரளக் கடலோரத்தில் பாதுகாப்பு திடீர் அதிகரிப்பு


15

  • kamadenu
  • Posted: 26 May, 2019 16:05 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

இலங்கையில் இருந்து ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேர் கேரளா, லட்சத்தீவுக்குள் ஊடுருவத் திட்டமிட்டிருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து கேரளக் கடற்கரை மாவட்டங்களில் பாதுகாப்பு பன்மடங்கு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மாதம் புனித வெள்ளி பண்டிகையன்று தேவாலயம், ஹோட்டல்கள் உள்ளிட்ட பல இடங்களில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய மனித வெடிகுண்டு தாக்குதலில் 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதலுக்குப் பின் இலங்கையில் இரு இஸ்லாமிய அமைப்புகள் தடை செய்யப்பட்டு, அவற்றின் வங்கிக் கணக்குகளை அந்நாட்டு அரசு முடக்கியது. அந்த இரு அமைப்புகளுடன் தொடர்புடைய 100க்கும் மேற்பட்டோரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், இலங்கையின் முக்கிய நகரங்களில் தீவிரவாதிகள் நடமாட்டத்தைத் தடுக்கும் வகையில் ராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கேரளா கடற்கரை வழியாக லட்சத்தீவுப் பகுதிக்கு இலங்கையில் இருந்து 15 ஐஎஸ் தீவிரவாதிகள் செல்லத் திட்டமிட்டுள்ளார்கள் என்று இலங்கை உளவுத்துறை இந்திய உளவுத்துறைக்குத் தகவல் அளித்தது.

இதைத் தொடர்ந்து கேரளக் கடற்கரை மாவட்டங்களில் வழக்கமான பாதுகாப்பைக் காட்டிலும் பன் மடங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடலில் கடற்படை பாதுகாப்புப் படையினர், கடற்படையினர் ரோந்து செல்வதை அதிகரித்துள்ளனர்.

இதுகுறித்து கடலோர போலீஸார் நிருபர்களிடம் கூறுகையில், "இலங்கை உளவுத்துறை எங்களுக்கு கடந்த 23-ம் தேதியே தகவல் அளித்துவிட்டது. ஐஎஸ் தீவிரவாதிகள் 15 பேர் கேரளாவுக்குள்ளும், லட்சத்தீவுகளிலும் ஊடுருவத் திட்டமிட்டுள்ளதாக எங்களை எச்சரித்தார்கள். அதைத் தொடர்ந்து பாதுகாப்பையும், ரோந்து செல்வதையும் பலப்படுத்திவிட்டோம்.

இலங்கை தாக்குதலுக்குப் பின், பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மோட்டார் படகுகளில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களையும், அதன் உரிமையாளர்களையும் விரைந்து கரை திரும்ப கேட்டுள்ளோம்" எனத் தெரிவித்தார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close