கோழிகளை விழுங்கிய மலைப்பாம்பு: 2 ஆண்டுகளுக்குப் பின் இழப்பீடு வழங்கிய அரசு


காசர்கோடு: மலைப்பாம்பு விழுங்கிய கோழிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேரள மாநில அரசு சார்பில் விவசாயிக்கு இழப்பீடுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கேரளம் மாநிலம், காசர்கோட்டைச் சேர்ந்த விவசாயி கே.வி.ஜார்ஜ். இவர் சிறிய அளவில் கோழிப்பண்ணை நடத்திய வந்தார். இந்த நிலையில், அவரது பண்ணையில் இருந்து திடீர் திடீரென கோழிகள் காணாமல் போனது. இதனால் யாரோ தனது கோழிகளைத் திருடுகிறார்கள் என்று அவர் சந்தேகப்பட்டு வந்தார்.

இந்த நிலையில், ஜூன் 2022-ல் ஒரு நாள், ஒரு மலைப்பாம்பு கோழியை விழுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது தான், மலைப்பாம்பால் தான் தனது கோழிகள் பறிபோனது என்ற உண்மை அவருக்குத் தெரிய வந்தது. இதையடுத்து அவர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக விரைந்து வந்த வனத்துறையினர் மலைப்பாம்பை அங்கிருந்து பிடித்துச் சென்றனர்.

அப்போது வனத்துறையினர் ஜார்ஜிடம், அரியவகை ஊர்வன அரசால் பாதுகாக்கப்பட்டவை என்பதால் இழப்பீடு கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்தனர். வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் மலைப்பாம்புக்கு மிகவும் பாதுகாக்கப்பட்ட அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் எடுத்துரைத்தனர். இதையடுத்து நிவாரணம் கோரி கேரள அரசுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால், இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில், ஓராண்டுக்குப் பிறகு, மாநில அமைச்சர் ஒருவர் நடத்திய நிகழ்வில், இந்தப் பிரச்சினையை ஜார்ஜ் எழுப்பினார். தன் பண்ணையில் பிடிபட்ட பாம்பு கேரள அரசுடையதாக இருக்கலாம் என்றும், காணாமல் போன கோழிகள் தன்னுடையது என்றும், அதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் அமைச்சரிடம் ஜார்ஜ் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். அப்போது அவருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார், ஆனால் நிவாரணம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், கேரள மனித உரிமை ஆணையத்தை அணுக ஜார்ஜ் முடிவு செய்தனர். இதையறிந்த வனத்துறை ஜார்ஜ்க்கு அழைப்பு விடுத்தது. இதன் பின்னர் தற்போது மலைப்பாம்பு இரையாக்கிய கோழிகளுக்கு மாநில அரசு சார்பில் 2,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.