[X] Close

யாருக்கு உதவும் இந்த மக்களவைத் தேர்தல் தீர்ப்பு...?


  • kamadenu
  • Posted: 26 May, 2019 07:31 am
  • அ+ அ-

-பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி

நாட்டின் 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகளில், ஆரோக்கியமான மாற்றம் எதுவும் தெரிகிறதா? இல்லை. மாறாக, அதற்கு நேர் எதிரான, கவலை தரும் போக்கு புலப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்துக்கு சற்றும் நல்லதல்ல.

தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் தவிர்த்த ஏனைய மாநிலங்களில், ஒட்டு மொத்தமாக மக்கள், ஒரே பக்கம் சாய்ந்து இருக்கிறார்கள். உத்தர பிரதேசத்தில் ஓரளவு பரவாயில்லை.

அவசரநிலைப் பிரகடனம், பிரபல தலைவரின் திடீர் மறைவு என்று, அசாதாரணமான சூழல் எதுவும் இல்லாத தேர்தலில், கேரளா (19-1), தமிழ்நாடு (37-1), ஆந்திரா (22-3), கர்நாடகா (26-2), குஜராத் (26-0), ராஜஸ்தான் (25-0), மகாராஷ்டிரா (41-7) டெல்லி (7-0), ஹரியானா (10-0), பிஹார் (39-1), மத்திய பிரதேசம் (28-1), இமாசலப் பிரதேசம் (4-0), உத்தர பிரதேசம் (62 -18), உத்தராகண்ட் (5-0), ஜார்க்கண்ட் (12-2), சத்தீஸ்கர் (9-2) என்று நாடு முழுக்க, எல்லாப் பகுதிகளிலும், ‘ஒரு பக்க' ஆதரவு மிதமிஞ்சிக் கிடக்கிறது.

இரண்டாவது நிலையில் உள்ள கட்சி /கூட்டணி, மிகவும் பின் தங்கி உள்ளது. வாக்களிப்பதில் மக்களிடம் நிலவும் ‘கும்பல் மனப்பான்மை' நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைவிட மோசமான, ஆபத்தான போக்கும் மேலோங்கி வருகிறது.

முதல், இரண்டாம் இடத்துக்கு அப்பால், மூன்றாவதாக ஒன்று, அநேகமாக எந்த மாநிலத்திலுமே இல்லை. மாநில அளவில், இரு கட்சி அரசியல் வலுவடைந்து வருகிறது. மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு கட்சிகள் இருப்பதால், பல கட்சிகள் இருப்பது போன்ற மாயத் தோற்றம் தெரிகிறது.

தமிழ்நாட்டில், திமுக அணியில் வெற்றி பெற்றுள்ள எந்தக் கட்சியும், தன்னளவில் தனித்து நின்று வெல்வதற்கான வலிமை கொண்டது அல்ல. ஆக, அவர்களின் வெற்றியும் திமுகவின் கணக்கிலேயே சேரும். இந்த நிலையில், அதிமுக, திமுகவுக்கு அடுத்ததாக (மாற்றாக என்று பொருள் கொள்ள வேண்டாம்) மூன்றாவது என்று, யாரையும் தெளிவாக அடையாளம் காட்ட முடிகிறதா..? ஜனநாயக அரசியலில் மூன்றாவது வலுவான இயக்கத்தின் தேவை, மிகவும் அத்தியாவசியமானது.

ஒரே ஓர் இயக்கம் மட்டுமே மிக வலிமையாக இருந்தால் எதேச்சாதிகாரம் கோலோச்சும்; இரு கட்சி அரசியலிலும் அதே நிலைமைதான். அமெரிக்க பாணி, இரு கட்சி அரசியல், இந்தியாவுக்கு சரி வராது. காரணம், இங்கே உட்கட்சி ஜனநாயகம் பெயரளவுக்கு மட்டுமே உண்டு. மாநிலக் கட்சிகளில் அதுகூட இல்லை.

‘கட்சித் தாவல் தடைச் சட்டம்', கட்சித் தலைமையின் ‘கொறடா' உத்தரவு, பொதுக்குழு, செயற்குழு, ஆட்சி மன்றக் குழுவின் தீர்மானங்கள், இவை எல்லாம் என்ன? இவற்றில், தேர்தலில் வாக்குரிமையைப் பயன்படுத்திய சாமானியனின் ‘உரிமை', பங்கு என்ன இருக்கிறது? கட்சித் தலைமை என்கிற தனி நபரின், விருப்பு வெறுப்புகள் மட்டுமே ‘கொள்கை முடிவுகள்'. கட்சிகளின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் கூட, பெட்டிப் பாம்புகள்தாம்.

பொதுத் தேர்தலில் போட்டி என்பது சாமானியனால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக மாற்றப்பட்டுவிட்டது. வெறும் வாக்காளனாக மட்டுமே இருக்கலாம்; ஒரு வேட்பாளன் ஆகத் தன்னை அவன் எந்நாளும் உயர்த்திக் கொள்ளக்கூடாது என்பதில் அதிகார மையங்கள் தெளிவாக உள்ளன.

கை தட்டவும், கொடி கட்டவும், கோஷம் போடவும் மட்டுமே மக்கள் வேண்டும்; நாற்காலிக்கு ‘வேண்டியவர்கள்' யார் என்று தேர்வு செய்வதில் அவர்களுக்கு எந்த உரிமையும் எப்போதும் வழங்கப்பட மாட்டாது. யோசித்துப் பார்த்து இருக்கிறோமா?பல கட்சி அரசியல் அமைப்புதான், அடித்தட்டு மக்களின் நியாயமான ஆசைகள், எதிர்பார்ப்புகள், குறைகள், கோரிக்கைகளை சரியாகப் பிரதிபலிக்கும். ஒரு கட்சி, இரு கட்சி ஜனநாயகம், ‘ஜமீன்தாரி' முறை, ஆதிக்க மனப்பான்மையை ஊக்குவிக்கவே செய்யும். தனிநபர் துதியைத் தாண்டி சிந்திக்கும், செயலாற்றும் ஆற்றல், பெரிய கட்சிகளுக்கு இருக்கவே முடியாது.

ஜனநாயக நெறிமுறைகளுக்கு எது ஏற்றது? சாமானியனின் குரல் எங்கே வலிமை பெறும்? இதுகுறித்து கவலைப்பட்டோமா? 1952 தொடங்கி, முதல் 30 - 40 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில், தேசிய, மாநில அளவில் செல்வாக்கு பெற்ற இயக்கங்கள், தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் செயல்பட்டதால்தான் இன்றளவும் ஜனநாயகம் உயிர்ப்புடன் திகழ்ந்து வருகிறது.

இந்த வகையில், பொதுவுடைமை இயக்கங்கள், தாம் ஆற்றிய ‘மூன்றாவது சக்தி' கடமையைத் தாமே ‘தியாகம்' செய்து கொண்டது, வரலாற்றுச் சோகம். ஓரிரு பதவிகளுக்காக தமது சுய அடையாளத்தை இழந்து நிற்கிற இடதுசாரிகளின் குறுகிய பார்வை; அத்தனை பிரிவினரையும் உள்ளடக்கிய பரவலான அரசியலை முன்னெடுக்க முன்வராத சிறு இயக்கங்களின் பக்குவமின்மை; உணர்ச்சிகளைத் தூண்டி விடுவதை மட்டுமே முழு நேரத் தொழிலாகக் கொண்டுள்ள காட்சி ஊடக எசமானர்களின் மறைமுக செயல்திட்டம்; ஊதி ஊதிப் பெரிதாக்கப்பட்ட ‘பிம்பங்கள்' பின்னால் ஓடும் வாக்காளர்களின் அறியாமை... ‘நம்பிக்கை' அரசியலுக்கு வழி விடுவதாக இல்லை.

ஒரே தலைமை, கொள்கை, இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொண்ட அவையில், பெரிதாக என்ன 'விவாதம்' நடந்துவிடப் போகிறது? இந்தியா போன்ற பரந்த நாட்டில், தமிழ்நாடு போன்ற அறிவார்ந்த மாநிலத்தில், பல்வேறு ‘பார்வைகள்', அணுகுமுறைகளின் பிரதிநிதிகள் இடம் பெறுவதுதான் ஆரோக்கியமானதாக இருக்கும். தேர்தல் முடிவுகள் இப்படித்தான் அமைந்து இருக்கின்றனவா?மக்கள் தேர்வு செய்து அனுப்பும் அவர்களின் பிரதிநிதி, ‘வேறு யாரோ ஒருவர்' சொற்படிதான் நடந்து கொள்வார்; அவரது ஆணைக்குத்தான் கட்டுப்படுவார் என்கிற யதார்த்தம், இன்று எழுதப்படாத, அல்ல; எழுதப்பட்ட விதியாக மாறி விட்டதே...

இதை இரு கட்சி அரசியல் மாற்றுமா? வளர்க்குமா? இந்திய ஜனநாயகம், வெளிப் பார்வைக்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அதன் உள்ளீட்டில், செயல்பாட்டில், சாமானியனின் உரிமைகள், மதிக்கப்படுகின்றனவா? மறுக்கப்படுகின்றனவா?மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் மூன்றாவது சக்தி, அதற்கு மேற்பட்ட சக்திகள் - ஒவ்வொரு நிலையிலும் தேவை. ஜனநாயகத்தின் வேர்கள் அவை. 17-வது மக்களவைத் தேர்தல், மன்னிக்கவும், வேர்களுக்கு நீர் ஊற்றியதாகத் தெரியவில்லை.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close