அரசு வேலை கிடைத்ததும் கணவனை கைவிட்ட மனைவி: சேர்த்து வைக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு


ஜான்சி: உத்தர பிரதேசத்தில் அரசு வேலை கிடைத்ததும், தன்னை உதறிவிட்டுச் சென்ற மனைவியை மீண்டும் தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியருக்கு கணவர் வேண்டுகோள் விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி பகுதியைச் சேர்ந்தவர் நீரஜ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ரிச்சா என்ற பெண்ணை 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறிய இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் ரிச்சாவுக்கு மாநில அரசில் கணக்காளர் பணி கிடைத்துள்ளது.

இது குறித்து தகவல் அறிந்ததும் ரிச்சா தனது கணவரிடம் தகவல் தெரிவிக்காமல் கடந்த ஜனவரி 18ம் தேதி வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரிச்சாவுக்கு அரசு வேலை கிடைத்த தகவல் தெரிந்ததும் அவர் பணியாணை வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு செல்வதை அறிந்து, நீரஜ் அங்கு சென்றுள்ளார். ஆனால் அவரை பார்ப்பதைத் தவிர்த்து, ரிச்சா பணியாணையை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது அரசுப் பணியில் இணைந்துள்ள ரிச்சா, நீரஜை தொடர்பு கொள்வதை தவிர்த்து வருகிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நீரஜ், தனது மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக மனு அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் இதுபோன்று நடப்பது இது முதல் முறை அல்ல. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த ஜோதி மௌரியா என்பவர், குடிமைப் பணி தேர்வுகளில் வெற்றி பெற்றதை அடுத்து தனது கணவரை கைவிட்டு சென்றதாக புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.