[X] Close

தேர்தல் வரும் போகும்; ஆனால் மனசாட்சியை இழக்காதீர்கள் கேஜ்ரிவால்: கம்பீர் அறிவுரை


  • kamadenu
  • Posted: 25 May, 2019 17:28 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

தேர்தலில் வெற்றி பெறுவதற்காக இழிவான உத்திகளைக் கையாண்டதாக ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவாலை குற்றஞ்சாட்டிய கிழக்கு டெல்லி எம்.பி. கவுதம் கம்பீர், தேர்தல் வரும் போகும் ஆனால் மனசாட்சியை இழந்து விடாதீர்கள் என அறிவுரை கூறியுள்ளார்.

முன்னதாக, கவுதம் கம்பீர் கிழக்கு டெல்லி தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே புகைச்சல் ஏற்பட்டது. இத்தொகுதியில் ஆம் ஆத்மி பெண் வேட்பாளரை நிறுத்தியது.

அதிஷி என்ற அந்த வேட்பாளார், கவுதம் காம்பீரை மிகத் தீவிரமாக விமர்சித்து வந்தார். தான் பெண் என்பதால் காம்பீர் தன்னை இழிவுபடுத்துவதாகக் கூறினார்.

மேலும், தன்னை சாதி ரீதியாக கம்பீர் குறைத்துப் பேசியதாகவும் குற்றஞ்சாட்டினார். கம்பீர் தனக்கு எதிராக கிழக்கு டெல்லி தொகுதியில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துள்ளார் என்றும் அதிஷி கூறியிருந்தார்.

இந்நிலையில், காம்பீர் இன்று (சனிக்கிழமை) டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "முதல்வர் கேஜ்ரிவால் அவர்களே, தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆனால், மனசாட்சியையும் நம்பகத்தன்மையையும் இழந்துவிட்டால் எல்லாமே தொலைந்துவிடும். நீங்கள் யாரையாவது போலியாக குற்றஞ்சாட்டினால் அதுவும் ஒரே ஒரு தொகுதியில் வெற்றிக்காக அப்படியொரு பொய்யைச் சொன்னால் நான் சொல்வதற்கு வேறென்ன இருக்க முடியும்.

நான் அரசியலுக்கு வந்ததற்குக் காரணம் மக்கள் சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம். எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்த எனது கட்சிக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.தேர்தல் முடிந்துவிட்டது. இனிதான் உண்மையான வேலை ஆரம்பிக்கிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்னை நான் நிரூபிக்க வேண்டும்.

டெல்லியை பாரிஸ் ஆக்குவேன், லண்டன் ஆக்குவேன் என்றெல்லாம் போலி வாக்குறுதி தர மாட்டேன். ஆனால், டெல்லியை இன்னும் சிறப்பான நகரமாக பெண்களுக்கு பாதுகாப்பான நகரமாக மாற்றுவேன். இங்கு சுத்தமான குடிதண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வதும், காற்று மாசை கட்டுப்படுத்துவதுமே எனது பிரதான பணி " என்றார்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close