[X] Close

நான் ஏற்றுக்கொள்ளவில்லை: தேர்தல் அதிர்ச்சியை கவிதை மூலம் கொட்டித் தீர்த்த மம்தா


  • kamadenu
  • Posted: 25 May, 2019 13:52 pm
  • அ+ அ-

மேற்கு வங்கத்தில் இத்தனை ஆண்டு காலம் அடையாளமே இல்லாமல் இருந்த பாஜக, இந்த முறை 18 இடங்களைக் கைப்பற்றியது. கிட்டத்தட்ட 40% வாக்குகள் பெற்றுள்ளது.

இது, மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமூல் காங்கிரஸுக்கு பேரதிர்ச்சியாக இறங்கியுள்ளது. இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் கருத்து தெரிவித்திருக்கிறார் மம்தா.

வங்காளம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் ‘நான் ஏற்றுக் கொள்ளவில்லை' என்ற தலைப்பில் அந்தக் கவிதையைப் பதிவிட்டுள்ளார். வெளிப்படையாக எந்த கட்சிப் பெயரையும், எந்த அரசியல் பிரமுகரையும் அவர் குறிப்பிடவில்லை என்றாலும்கூட அவரின் இந்தக் கவிதை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா ஆகியோரை குறிப்பால் உணர்த்துவது போல் அமைந்துள்ளது.

 

மம்தாவின் கவிதை

 

நான் ஏற்றுக்கொள்ளவில்லை..

 

மதவாதத்தின் நிறத்தில்

எனக்கு நம்பிக்கை இல்லை

வன்தாக்குதலும் சகிப்புத்தன்மையும்

எல்லா மதத்திலுமே இருக்கிறது

நான் வங்கத்தில் உதித்த மென்மையான மறுமலர்ச்சியின்

பணிவான பணியாள்

நான் மதம்சார்ந்த வன்மங்களை விற்பதில் நம்பிக்கையில்லாதவள்

மனிதத்திலிருந்து வெளிச்சத்தை பிரதிபலிக்கும் மதத்தையே நான் நம்புகிறேன்

ஆனால், சிலர் மனமுவந்து மதத்தை துருப்புச் சீட்டாகப் பயன்படுத்துகின்றனர்

அதன்மூலம் மலையளவு செல்வாக்கில் திளைக்கின்றனர்

ஆனால் நான் எனது எண்ணற்ற கடமையில் என்னை ஈடுபடுத்தியிருக்கிறேன்

ஏனென்றால் அவர்களைப் போல் நான் மன அமைதியின்மையில் இல்லை

ஒருவேளை அதனால்தான் அவர்கள் மதத்தின் இருக்கும் வன்மத்தை விற்கிறீர்களோ?

சகிப்புத்தன்மையின் நம்பிக்கை உள்ளவர்களே

நாம் அனைவரும் ஒன்றுபடலாம்.. எல்லோரையும் தட்டி எழுப்பலாம்

இந்த ஒட்டுமொத்த உலகமே ஒரே நாடுதான்

ஐயகோ ஏன் இந்த கணக்குகள்.. வன்மத்தை ஓர் ஒழுக்கமாக பார்க்கும் கணக்கு தேவையா?

 

இவ்வாறு மம்தா கவிதை வடித்திருக்கிறார்.

இந்தக் கவிதை பாஜகவை குறிவைத்தே எழுதப்பட்டதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தன்னகத்தே நிறைய தனித்திறமையைக் கொண்டவர். ஓவியம் வரைதல், கவிதை எழுதுதல், இசைக்கருவிகளை இசைத்தல் என பல திறமைகள் கொண்டவர்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close