[X] Close

செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி ராஜினாமா கடிதம் அளிக்கவில்லை: காங். கட்சி மறுப்பு


  • kamadenu
  • Posted: 25 May, 2019 13:39 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து ஆலோசிக்க இன்று கூடிய காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக எழுந்த செய்தியை காங்கிரஸ் மறுத்துள்ளது.

தோல்விக்கு  பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததாகவும், அதை செயற்குழு உறுப்பினர்கள் ஏற்க மறுத்துவிட்டதாகவும் ஏஎன்ஐ செய்தி வெளியானது. ஆனால், அந்த செய்தி உண்மையில்லை ராகுல் காந்தி தனது பதவியை ராஜினாமா செய்வதாக கூறவில்லை என்று காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

17-வது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகமோசமான தோல்வியைச் சந்தித்து 52 இடங்களில் மட்டுமே வென்றது. கடந்த 2014-ம் ஆண்டு இதேபோன்ற காங்கிரஸ் கட்சி மோசமான தோல்வியைச் சந்தித்து 44 இடங்களில்தான் வென்றது. இதனால், எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட பெறமுடியவில்லை.

அதேபோன்ற தோல்வியைத்தான் இந்த மக்களவைத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி  பெற்றுள்ளது.  52 இடங்களில் வென்றபோதிலும் இந்த முறையும் எதிர்க்கட்சி எனும் அந்தஸ்தை காங்கிரஸ் கட்சியால் பெற முடியாது.

அதுமட்டுமல்லாமல் நேரு குடும்பத்தினர் பாரம்பரியமாக போட்டியிட்டு வென்றுவரும் அமேதி தொகுதியிலும் இந்த முறை காங்கிரஸ் கட்சி வெற்றி வாய்ப்பை இழந்துவிட்டது. அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தது அந்த கட்சியினருக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் 17 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களைக் கூட பெறமுடியாமல் மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளது.

இந்த தோல்வி குறித்து விவாதிப்பதற்காகவும், தங்களை சுயபரிசோதனை செய்வதற்காகவும் காங்கிரஸ் கட்சியின் உயர்மட்ட அதிகாரம் கொண்ட செயற்குழுக் கூட்டம் இன்று தொடங்கி நடந்து வருகிறது.

cong.jpg 

இந்த செயற்குழுக் கூட்டத்தில் தலைவர் ராகுல் காந்தி, ஐக்கிய முற்போக்கு கூட்டணித் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள், மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, அகமது படேல், ஷீலா தீக்சித், மல்லிகார்ஜூன கார்கே,அம்பிகா சோனி, ஆனந்த் சர்மா, ஜோதிர்தியா சிந்தியா உள்ளிடடோர் பங்கேற்றுள்ளனர்.

மக்களவைத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார் என்றும், அந்த ராஜினாமாவை செயற்குழு உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர் என்று ஏஎன்ஐ செய்தி வெளியிட்டது.  இதனால்பரபரப்பு ஏற்பட்டது.

ஆனால், இந்த செய்தியை உடனடியாக காங்கிரஸ் கட்சி மறுத்துவிட்டது. அந்த கட்சியின் தலைமைச் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா ட்விட்டரில் கூறுகையில், " காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்யவில்லை, அவ்வாறு வரும் செய்தி தவறானவை" எனத் தெரிவித்தார்.

cong11.jpg 

தற்போது நடந்துவரும் செயற்குழுக் கூட்டத்தில் 23 உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இதில் 4 பேர் மட்டுமே தேர்தலில் வென்றுள்ளனர். ராகுல் காந்தி, சோனியா காந்தி, கவுரவ் கோகய், ஏ.செல்லக்குமார் ஆகியோர் மட்டுமே வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதேசமயம், மற்றஉறுப்பினர்களான மல்லிகார்ஜுன கார்கே, உத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ்ராவத், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித், முன்னாள் மக்களவை சபாநாயகர் மீரா குமார், ஜோதிர்தியா சிந்தியா, ரகுவீர் சிங் மீனா, ஜிதின் பிரசாத், தீபேந்திர் ஹீடா, சுஷ்மிதா தேவ், கே.ஹெச். முனியப்பா, அருண் யாதவ் ஆகியோர் தோல்வி அடைந்துள்ளனர்.

தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ஏற்கனவே உ.பி. காங்கிரஸ் பொறுப்பாளர் ராஜ் பாப்பர், ஹெச்.கே.பாட்டீல், ஒடிசா மாநிலத் தலைவர் நிரஞ்சன் பட்நாயக், அமேதி மாவட்ட காங். தலைவர் யோகேந்திர மிஸ்ரா ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close