காதலுக்கு எதிர்ப்பு: பெற்றோர், சகோதரரைக் கொன்ற சிறுவன்!


காதலித்த பெண்ணை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர் மற்றும் சகோதரனை 15 வயது சிறுவன் கழுத்தை அறுத்துக் கொலை செய்த சம்பவம் வாரணாசியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள குசும்ஹிகலா கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுவன், கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்த பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்தார். ஆனால், இந்த திருமணத்திற்கு அவரது பெற்றோரும், சகோதரனும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் தனது குடும்பத்தினரைக் கொல்ல முடிவு செய்தார்.

அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த போது நள்ளிரவில் 1 மணியளவில் மது அருந்தி விட்டு வந்த சிறுவன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரன் ஆகியோரின் கழுத்தை கத்தியால் அறுத்து கொலை செய்தார்.. இதன்பின் வீட்டிற்கு வெளியே வயல்வெளியில் கத்தியை மறைத்து விட்டு அருகே கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்று விட்டார். அதன்பிறகு அதிகாலை வீடு திரும்பிய சிறுவன், யாரோ தனது குடும்பத்தினரை கொன்று விட்டதாக கிராமமக்களுக்கு போன் செய்து கூறியுள்ளார். இதையடுத்து நந்த்கஞ்ச் காவல் நிலைய போலீஸார் விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட சிறுவனின் தந்தை முன்ஷி பிந்த்(45), தாய் தேவந்தி(40) மற்றும் சகோதரனின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிறுவனிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக தகவல் தந்ததால் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை பிடித்து விசாரித்த போது தனது பெற்றோர் மற்றும் சகோதரரை கழுத்தை அறுத்துக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். தனது காதல் திருமணத்திற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், பல நாட்களுக்கு முன்பே அவர்களை கொலை செய்ய முடிவு செய்ததாகவும், ஆனால், முடியவில்லை என்றும் சிறுவன் கூறியுள்ளார்.

இந்த நிலையில், அவர்கள் நன்கு உறங்கிய போது அவர்களை கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டதாக சிறுவன் கூறினார். இதையடுத்து அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். இது தொடர்பாக காசிபூர் எஸ்.பி- ஓம்வீர் சிங் கூறுகையில், மூவரை கொலை செய்ய சிறுவன் பயன்படுத்திய கத்தி மீட்கப்பட்டுள்ளது. இந்த கொலைக்குப் பின்னணியில் யாரும் இருக்கிறார்களா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார். காதல் திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த குடும்பத்தினரை கூண்டோடு சிறுவன் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.