சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடிய குடியரசு தலைவர் திரளபதி முர்மு!


இந்திய வீராங்கனை சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் திரளபதி முர்மு பேட்மிண்டன் விளையாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருது பெற்ற வீராங்கனைகளுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள கலாச்சார மையத்தில் இன்று நடைபெறும் நிகழ்ச்சியில் பத்ம விருது பெற்ற பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் உரையாற்ற உள்ளார். இதையொட்டி, குடியரசுத் தலைவர் மாளிகையில் சாய்னா நேவால் நேற்றிரவு தங்கினார்.

அப்போது, குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மைதானத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சாய்னா நேவாலுடன் பேட்மிண்டன் விளையாடி மகிழ்ந்தார். அப்போது அரங்கில் இருந்த பலரும் இதனை ஆர்வத்துடன் அதைக் கண்டுரசித்து உற்சாகப்படுத்தினர்.

இதுதொடர்பான வீடியோவை எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள குடியரசுத் தலைவர் மாளிகை, “உலக அரங்கில் பெண்கள், வீராங்கனைகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், பேட்மிண்டன் விளையாட்டின் மையமாக இந்தியா உருவெடுக்க ஊக்கம் அளிக்கும் வகையில் குடியரசுத் தலைவரின் இச்செயல் அமையும். சாய்னா நேவாலுடன் குடியரசுத் தலைவர் பேட்மிண்டன் விளையாடியது, விளையாட்டின் மீது அவர் இயற்கையாகவே பற்றுகொண்டவர் என்பதை காட்டுகிறது" என்று பதிவிடப்பட்டுள்ளது.