[X] Close

30-ம் தேதி பிரதமராக மோடி பதவியேற்பு; பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு: அமித் ஷாவுக்கு அமைச்சர் பதவி


30

  • kamadenu
  • Posted: 24 May, 2019 17:43 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

17-வது மக்களவைத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்ற நிலையில், வரும் 30-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக பிரதமராகப் பதவி ஏற்கிறார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சியை மிகப் பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த விழாவுக்கு சார்க் நாடுகளின் தலைவர்களை சிறப்பு விருந்தினர்களாக அழைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் 2-வது முறையாகப் போட்டியிட்டு அபார வெற்றி பெற்றுள்ளார். ஏறக்குறைய 6.69 லட்சம் வாக்குகள் பெற்ற மோடி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராயைக் காட்டிலும் 4.75 லட்சம வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஆதலால், பதவி ஏற்புக்கு முன்பாக, பிரதமர் மோடி வாரணாசி சென்று தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் அங்கிருந்து குஜராத் சென்று தனது தாய் ஹீரா பென்னிடம் மோடி ஆசி பெறவும் திட்டமிட்டுள்ளார்.

இந்த இரு நிகழ்ச்சிகளுக்குப் பின்புதான் பதவியேற்பு விழா இருக்கும். முதலில் 28-ம் தேதி பதவியேற்பு விழாவை நடத்த பாஜக திட்டமிட்ட நிலையில், அது 30-ம்தேதிக்கு மாற்றப்பட்டது.

கடந்த முறை பிரதமர் மோடி பதவியேற்பு விழாவுக்கு ஏராளமான சார்க் நாடுகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டனர்.  ஆனால், இந்த முறை உலக நாடுகளின் தலைவர்களை பதவியேற்பு விழாவுக்கு அழைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. உலக நாடுகளுடன் இந்தியா இணக்கமாக இருப்பதைக் காட்டும் வகையிலும், ஜனநாயக்தில் தேர்தல் சிறப்பாக நடந்து முடிந்துள்ளதை உலகிற்கு உணர்த்தும் வகையிலும் அந்த நிகழ்ச்சி இருக்க வேண்டும் என முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே வெற்றி பெற்ற எம்.பி.க்கள் அனைவரும் நாளை மாலைக்குள் டெல்லி வர உள்ளனர். அதன்பின் பாஜகவின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் மோடி தலைவராக 26-ம்தேதி முறைப்படி தேர்வு செய்யப்படுகிறார்.

பிரதமர் மோடி பதவி ஏற்பு விழா நடக்கும்போதே, அமைச்சர்களின் பதவி ஏற்புவிழாவையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த முறை பதவி ஏற்கும் மோடி தலைமையிலான  புதிய அரசில் யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது.

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா இந்த முறை அமைச்சரவையில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது எனத் தெரிகிறது. இவருக்கு முக்கியத் துறைகளான உள்துறை, நிதித்துறை, வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்துறை ஆகிய 4 துறைகளில் ஏதேனும் ஒரு துறை வழங்கப்படலாம்.

நிதி அமைச்சர் அருண் ஜேட்லி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்கு உடல்சார்ந்த பிரச்சினைகள் உள்ளன. இதனால், இவர்கள் தொடர்ந்து அமைச்சர் பதவியில் இருப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.

நிதி அமைச்சர் ஜேட்லி, கடந்த 2014-ம் ஆண்டில் அமிர்தசரஸ் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் மத்தியப் பிரதேசத்தில் விதிஷாவில் மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு அமைச்சரானார். ஆதலால், இந்த முறை சுஷ்மாவுக்கும், ஜேட்லிக்கும் அமைச்சர் பதவி வழங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

பாதுகாப்புதுறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் புதிய அரசில் தொடர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை வீழ்த்தி சாதனை படைத்திருப்தால், ஸ்மிருதி இரானிக்கு வலிமையான துறை வழங்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதவிர ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத், பியூஷ் கோயல், நரேந்திர சிங் தோமர், பிரகாஷ் ஜவடேகர் ஆகியோர் புதிய அரசில் அமைச்சர்களாகச் சேர்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பாஜக தவிர்த்து கூட்டணிக் கட்சிகளான சிவசேனா கட்சிக்கும் மத்திய அமைச்சரவையில் வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், மேற்கு வங்கத்தில் அதிகமான இடங்களை பாஜக பிடித்துள்ளதால் அந்த மாநிலத்தில் இருந்து சிலருக்கு அமைச்சர் வாய்ப்பு வழங்கப்படலாம்.  மேலும், ஒடிசா, தெலங்கானாவைச் சேர்ந்த எம்.பி.க்களுக்கும் அமைச்சர் வாய்ப்பு கிடைக்கலாம்.

பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், "பிரதமர் மோடி தலைமையிலான புதிய அமைச்சரவையில் இளம், புதிய முகங்களுக்கு அமைச்சர் வாய்ப்பு கிடைக்கும். இதன் மூலம் 2-வது கட்டத் தலைவர்களை வளர்க்க பாஜக முயற்சி எடுத்து வருகிறது" எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close