[X] Close

மோடி அரசுக்குக் காத்திருக்கும் புதிய பொருளாதார சவால்கள்


  • kamadenu
  • Posted: 24 May, 2019 16:43 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவைத் தேர்தலில் அபாரமான வெற்றியைப் பெற்று அடுத்த சில நாட்களில் புதிய அரசை அமைக்கக் காத்திருக்கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு முன் ஏராளமான சவால்கள் காத்திருக்கின்றன.

வேலையின்மைப் பிரச்சினையைத் தீர்க்கும் பொருட்டு, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், உலக அளவில் மெதுவாக நகர்ந்து வரும் தேசத்தின் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்துதல், வேளாண் சிக்கல்கள், தனியார் முதலீட்டை அதிகப்படுத்துதல், வங்கிகளின் வாராக்கடனை சிறப்பாகக் கையாளுதல், தொழிலாளர் சட்டங்களைச் சீரமைத்தல் போன்றவை மோடி அரசின்முன் இருக்கும் முக்கியப் பொருளாதாரப் பிரச்சினைகளாக இருக்கின்றன.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு கடந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் புதிய வேலைவாய்புகளை எதிர்பார்த்த அளவு உருவாக்கவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. தேர்தலில் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்துதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலையின்மை நிலவுவதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால், இதை மத்திய அரசு தொடர்ந்து மறுத்தது. ஆதலால், வேலையின்மையைத் தீர்ப்பது தலையாயப் பிரச்சினையாக மோடி அரசுக்கு இருக்கிறது.

மோடி அரசு எதிர்நோக்கும் முக்கிய பொருளாதாரப் பிரச்சினைகள் குறித்து எஸ்அன்ட்பி குளோபல் ரேட்டிங் தலைமை பொருளாதார ஆலோசகர் ஷான் ரோச்சே கூறுகையில், " கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சி செய்த பிரதமர் மோடி தலைமையிலான அரசு தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கும் ஆட்சி செய்யப்போகிறது.

கடந்த 5 ஆண்டுகளில் அரசின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை(சிஏடி) முறையாக கட்டுக்குள் கொண்டுவரவில்லை. இதை வரும் காலங்களில் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். நடப்புக்கணக்கு பற்றாக்குறையின் மூலம்தான் சர்வதேச அளவில் தேசத்தின் பொருளாதாரம் ஸ்திரமாக இருப்பதை அறிவிக்க முடியும்.

அதேபோல மனித வளத்தை முறையாகப் பயன்படுத்தவும் இல்லை. இதில் மனித வளம் என்பது வேலைவாய்ப்புதான். அரசு சார்பில் போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை. அடுத்து வரும் ஆண்டுகளில் தனியார் முதலீட்டை அதிகப்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த முயற்சிக்க வேண்டும்.

கடந்த ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி, திவால் சட்டம், ஆகியவற்றை முறைப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. ஜிஎஸ்டி முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. இதை நெறிப்படுத்த வேண்டும். அதேபோல திவால் சட்டத்திலும் அதிருப்திகள் நிலவுகின்றன.

பொதுத்துறை வங்கிகளின் சொத்து, வாராக்கடன் தொடர்பான பிரச்சினையை சரியாகக் கையாளாவிட்டால் அரசுக்குப் பெரும் சிக்கலாக உருவெடுக்கும். வங்கிகளை முறைப்படுத்துவது அவசியம். நாட்டில் புதிதாக வேலைவாய்புகளை உருவாக்குவதில் அரசின் பங்களிப்பைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆதலால், தனியார் முதலீட்டை ஊக்கப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது" என்று ஷான் ரோச்சே தெரிவித்தார்.

மோடியின் அரசில் தேசத்தின் பொருளாதார வளர்ச்சி சீராக இருக்கிறது என அரசுத் தரப்பில் கூறினாலும், கடந்த 2013-14ம் ஆண்டில் இருந்த நிலைக்கே கடந்த 2018-19 ஆம் ஆண்டு டிசம்பர் காலாண்டுக்கு இணையாக வந்துவிட்டது. 2013-14 ஆம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருந்த பொருளாதார வளர்ச்சி 2018 அக்டோபர் , டிசம்பர் காலாண்டில் 6.6 சதவீதமாக குறைந்துவிட்டது. இது  இடைப்பட்ட ஆண்டுகளில் 8.2 சதவீதம் வரை பொருளாதார வளர்ச்சி உயர்ந்தபோதிலும் அதைத் தக்கவைக்க முடியவில்லை.

இஒய் இந்தியா நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர்  டி.கே. ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "மோடி அரசின் முன் இப்போது இருக்கும் முதல் சவால், தேசத்தின் பொருளதார வளர்ச்சியைத் தூண்டிவிட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அதற்கு முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும்.

பண அடிப்படையில், வங்கிகளின் வட்டி வீதத்தை இன்னும் 0.25 சதவீதம் குறைப்பதற்கு முயற்சி எடுப்பது அவசியம். ஏற்கெனவே குறைக்கப்பட்டாலும் அது எதிர்பார்த்த அளவுக்கு பலனைக் கொடுக்கவில்லை. ஆதலால், ரிசர்வ் வங்கியிடம் இதற்கான அழுத்தத்தை அளிப்பது அவசியம்.

வட்டி வீதத்தைக் குறைப்பதோடு, அரசின் முதலீட்டு செலவீனங்களை அதிகப்படுத்த வேண்டும். முழுமையான பட்ஜெட்டைத் தயாரித்து அதில் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களுக்கு அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு செய்து, செலவுகளை அதிகப்படுத்த வேண்டும். மக்களின் திட்டங்களுக்கு செலவுகளை அதிகப்படுத்தும்போதுதான் பொருளாதாரச் சக்கரம் சுழலத் தொடங்கும்" எனத் தெரிவித்தார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close