[X] Close

பாஜகவில் வெற்றி பெற்ற சினிமா நட்சத்திரங்கள்: காங்கிஸின் சத்ருஹன் சின்ஹா, ஊர்மிளா படுதோல்வி


  • kamadenu
  • Posted: 24 May, 2019 13:18 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

17-வது மக்களவைத் தேர்தலில் பாஜகவில் வாய்ப்பு பெற்ற பல பாலிவுட் நட்சத்திரங்கள் வெற்றியையும், காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு பெற்ற நடிகர், நடிகைகள் தோல்வியையும் சந்தித்துள்ளார்கள்.

இதில் பாஜக சார்பில் போட்டியிட்ட சன்னி தியோல், பாடகர் ஹன்ஸ ராஜ் ஹன்ஸ், ஹேமா மாலினி, கிரண் ஹேர், ரவி கிசான் ஆகியோர் அபார வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.

அதேசமயம், காங்கிரஸ் கட்சியில் போட்டியிட்ட உ.பி. மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர், நடிகை ஊர்மிளா, சத்ருஹன் சின்ஹா, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மூன் மூன் சென் ஆகியோர் தோல்வி அடைந்தனர்.

மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டபின்புதான் பாலிவுட் நட்சத்திர நடிகர சன்னி தியோல் பாஜகவில் இணைந்தார். நடிகர் தர்மேந்திராவின் மகனான சன்னி தியோலுக்கு பஞ்சாபின் குர்தாஸ்பூரில் பாஜக வாய்ப்பளித்தது. இந்த தொகுதியில் 82 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் சன்னி தியோல் வெற்றி பெற்றார்

ஏற்கெனவே பாஜக வேட்பாளரும், நடிகருமான வினோத் கண்ணாவின் கோட்டையாக இருந்த குருதாஸ்பூர் தொகுதி அவரின் மறைவுக்குப்பின் சன்னிதியோலுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சன்னி தியோலின் தந்தை நடிகர் தர்மேந்திரா, தனது மகனுக்கும், மனைவி ஹேமா மாலினிக்கும் தேர்தலில் பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரம் மக்கள் மத்தியில் எடுப்பட்டு இருவரும் வெற்றி பெற்றுள்ளார்கள்.

மதுரா தொகுதியில் போட்டியிட்ட ஹேம மாலினி தொடர்ந்து 2-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சியின் குன்வர் நரேந்திர சிங் தோல்வி அடைந்தார்.

பாஜக சார்பில் வடமேற்கு டெல்லியில் போட்டியிட்ட பாடகர் ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் 5.5 லட்சம் வாக்குகள் பெற்று ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் குகன் சிங்கை தோற்கடித்தார்.

சண்டிகரில் பாஜக சார்பில் போட்டியிட்ட கிரண் கேர், 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் பவன் குமார் பன்சாலை தோற்கடித்தார்

காங்கிரஸ் கட்சியில் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்புதான் பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் இணைந்தார். அவருக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளர் கோபால் ஷெட்டியிடம் 2.41 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஊர்மிளா தோல்வி அடைந்தார்.

 மோடியின் அலை பாஜகவில் இருந்த பல நடிகர், நடிகைகளுக்கு வீசிய நிலையில் ஏனோ ஜெயப் பிரதாவுக்கு மட்டும் வீசவில்லை எனத் தெரியவில்லை. ராம்பூரில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் ஆசம் கானை எதிர்த்து போட்டியிட்ட ஜெயப்பிரதா தோல்வி அடைந்தார்.

கேரள மாநிலத்தில், திருச்சூர் தொகுதியல் பாஜக சார்பில் நடிகர் சுரேஷ் கோபி  போட்டியிட்டு, காங்கிரஸ் வேட்பாளர் டி என். பிரதாபனிடம் தோல்வி அடைந்தார்.

பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த சத்ருஹன் சின்ஹாவும் தோல்வி அடைந்தார். பாட்னா சாஹிப் தொகுதியில் மத்திய அமைச்சர் ரவிசங்கர்  பிரசாத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சத்ருஹன் சின்ஹா 2.80 லட்சம் வாக்குகளில தோல்வி அடைந்தார்.

சத்ருஹன் மனைவி பூனம் சமாஜ்வாதிக் கட்சி சார்பில் லக்னோவில் போட்டியிட்டார். ராஜ்நாத் சிங்கை எதிர்த்து களமிறங்கிய பூனம் தோல்வி அடைந்தார்.

போஜ்பூரி நடிகர் ரவி கிசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தவர். உ.பியில் முதல்வர் ஆதித்யநாத்தின் கோட்டையான கோரக்பூரில் ரவி கிசனுக்கு வாய்ப்பு வழங்கியது பாஜக. இந்த தேர்தலில் 7.14 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ரவி கிசான் வெற்றி பெற்றார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் வங்காள நடிகை மூன் மூன் சென்னுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரத்தின் போது மூன் மூன் சென் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அன்சோல் தொகுதியில் போட்டியிட்ட மூன் மூன் சென் 1.97லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாலிவுட் பாடகர் பாபுல் சுப்ரியோவிடம் தோல்வி அடைந்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட மற்றொரு நடிகர் மிமி சக்ரவர்த்தி, 3.93 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் அனுபம் ஹஸ்ராவை வென்றார்.

மேற்கு வங்கத்தில் ஹூக்ளி தொகுதியில் போட்டியிட்ட நடிகரும் பாஜக வேட்பாளருமான லாக்கெட் சாட்டர்ஜி, 73 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் வேட்பாளர் ரத்தன் தேவால் தோற்கடிக்கப்பட்டார்.

தேசிய விருதுபெற்ற நடிகர் பிரகாஷ் ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இந்த தொகுதியில் படுதோல்வியைச் சந்தித்த பிரகாஷ் ராஜ் மூன்றாவது இடத்தைத்தான் பிடித்தார.

காங்கிரஸ் கட்சியின் மறைந்த எம்.பி. அம்பரீஷ் மனைவி சுமலதா மாண்டியா தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டார். இவருக்கு பின்புலத்தில் இருந்து பாஜக ஆதரவு அளித்தது. இந்த தேர்தலில் குமாரசாமியின் மகன் ஹசனை வீழ்த்தி சுமலதா வெற்றி பெற்றார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close