லக்னோவில் பயங்கரம்: மாடியில் இருந்து மாணவியை தள்ளி விட்ட காதலன்


திருமணம் செய்ய வலியுறுத்திய செவிலியர் கல்லூரி மாணவியை அவரது காதலன் மாடியில் இருந்து கீழே தள்ளி விட்டார். இதில் அந்த மாணவியின் முதுகுத்தண்டு உடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள உன்னாவோவை சேர்ந்த மாணவி, பிஜ்னோரில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்தபடியே அருகில் உள்ள செவிலியர் கல்லூரி ஒன்றில் படித்து வந்தார். இந்த கிராமத்தைச் சேர்ந்த தரம்பால் என்ற இளைஞரும், மாணவியும் காதலித்து வந்தனர். இதனால் அவர்கள் நெருங்கிப் பழகியுள்ளனர். இந்நிலையில், தன்னைத் திருமணம் செய்து கொள்ளுமாறு தரம்பாலிடம் மாணவி வலியுறுத்தி வந்ததால் அவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், சம்பவ நாளன்று தன்னை திருமணம் செய்யுமாறு மீண்டும் தரம்பாலிடம் மாணவி வலியுறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தரம்பால், மாடியில் இருந்து மாணவியை கீழே தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தலைமறைவானார். மாடியில் இருந்து கீழே விழுந்ததால் மாணவியின் முதுகுத்தண்டு உடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த மாணவியின் பெற்றோர் பதறியடித்தப்படி பிஜ்னோருக்கு வந்தனர். மருத்துவமானையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மாணவி, தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, குற்றம் சாட்டப்பட்ட தரம்பால் மீது பிஜ்னூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் போலீஸார், பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது தரம்பால் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார். இதையடுத்து அவர் மீது பலத்கார வழக்குப்பதிவு செய்து போலீஸார் தேடி வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு ஷிதாலா மாதா கோயில் அருகே தரம்பால் போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.