வீட்டில் டிராப் செய்கிறோம் : காரில் ஏறிய 5 சிறுமிகளுக்கு நேர்ந்த கொடூரம்!


நடந்து சென்ற ஐந்து சிறுமிகளை வீட்டில் ட்ராப் செய்கிறோம் என காரில் ஏற்றிச் சென்ற கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் காஷ்மீர் என்று அழைக்கப்படும் குடகு மாவட்டத்தில் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. குடகு மாவட்டம், பொன்னம்பேட்டை தாலுகாவில் உள்ள குட்டா - நாகர்ஹோளே சாலையில் 5 சிறுமிகள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, ​​காரில் வந்த 5 இளைஞர்கள், உங்கள் வீட்டில் இறக்கி விடுகிறோம் என்று அழைத்துள்ளனர். இதனை நம்பி அந்த சிறுமிகள் காரில் ஏறிச் சென்றுள்ளனர். இதையடுத்து, வெறிச்சோடிய பகுதியில் காரை நிறுத்திய இருவர், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும் மூன்று பேர் மற்றொரு சிறுமியை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது. இதனால் காரில் இருந்து இறங்கி ஓடிய சிறுமிகள் இருவர் அப்பகுதி மக்களிடம் உதவி கோரியுள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த பொதுமக்கள் வந்து சிறுமிகளை மீட்டனர். கடந்த 9-ம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குட்டா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று காரில் இருந்த ஐந்து பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்களில் இருவர் குட்டாவைச் சேர்ந்தவர்கள் என்றும், மூன்று பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள், நவீந்திரா (24), அக்‌ஷயா (27), ராகுல் டோல்வர்த்தி (21), மனு டோல்வர்த்தி (25), சந்தீப் டோல்வர்த்தி (27) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் 5 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.