[X] Close

மதச்சார்பின்மை என்ற முகமூடியைப் போட்டுக்கொண்டு யாரும் இனி நாட்டை ஏமாற்ற முடியாது: தொண்டர்களிடையே மோடி வெற்றிப் பேச்சு


  • kamadenu
  • Posted: 23 May, 2019 20:58 pm
  • அ+ அ-

-Muthukumar R_50162

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி தலைமை பாஜக கூட்டணி மகா வெற்றியைப் பெற்று 2-ம் முறையும் மோடி ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார். தனிப்பட்ட முறையில் பாஜகவுக்கு 2014 முடிவுகளை விட இப்போது அதிக முன்னிலையோடு சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் புதுடெல்லியில் இன்று கட்சித் தொண்டர்கள் மத்தியில் மோடி பேசியதாவது:

''மதச்சார்பின்மை என்ற முகமூடியை அணிந்து கொண்டு இனி யாரும் நாட்டை ஒரு போதும் ஏமாற்ற முடியாது. இந்தியாவில் முதல் முறையாக ஆளும் கட்சி மீது எந்த ஒரு அரசியல் கட்சியும் ஊழல் குற்றச்சாட்டு வைக்க முடியாத தேர்தலாக இது அமைந்தது.

இரண்டு விஷயங்கள்தான் உள்ளன. ஒன்று ஏழை, இன்னொன்று ஏழ்மையை அகற்ற விரும்பும் ஒருவர். 1942 முதல் 1947 வரை மக்கள் நாட்டுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் அனைத்தையும் செய்தனர். அதே உணர்வுடன் 2019 முதல் 2024 வரை நாம் இந்தியாவை வளம்பெறச் செய்வோம்.

இன்று 11 கோடி மக்கள் இந்தப் பிச்சைக்காரனின் பையை வாக்குகளால் நிரப்பியுள்ளனர். நாடு விடுதலையடைந்ததற்குப் பிறகு இதுதான் மக்கள் அளித்த மிகத்தீர்மானகரமான முடிவு. அதுவும் 35-45 டிகிரி வெயிலில் தீர்மானம் எடுத்து வாக்களித்துள்ளனர். இதுவே ஒரு பெரிய அதிசயம்தான்.

இந்தியா இப்போது சூப்பர் பவர் என்பதை உலகம் இப்போது குறித்துக் கொள்ளட்டும்.

தேர்தல் ஆணையம் ராணுவ வீரர்கள் மற்றும் ஜனநாயகக் காவலர்களுக்கு நன்றியைப் பதிவு செய்கிறேன். இந்த ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையை உயிருடன் வைத்திருந்ததற்கு இவர்களுக்கு நன்றி.

கடின உழைப்பிற்காக அமித் ஷாவுக்குப் பாராட்டுகள். பாஜக தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.130 கோடி மக்களுக்குத் தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 2019 தேர்தல் முடிவு புதிய இந்தியாவுக்கானது. புதிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கைக்கு மக்கள் ஆதரவு அளித்தனர். உலக ஜனநாயகத்தில் இந்த வெற்றி முக்கியமானது.

கோடானுகோடி கட்சித் தொண்டர்கள் ஒரேயொரு உணர்வை நோக்கியே பணியாற்றினர். அது ‘பாரத் மாதா கி ஜெய்’ என்பதுதான். தன்னலமற்ற தொண்டர்கள் இந்த வெற்றியை உறுதி செய்தனர்.

நான் இன்று மிகவும் அலுவல்களில் இருந்ததால் தேர்தல் முடிவுகளைப் பார்க்கவில்லை. எனக்கு முழு தகவல் தெரியாது. இது மோடியின் வெற்றியல்ல, ஊழலற்ற இந்தியாவைக் கனவு காணும் குடிமக்களின் வெற்றி. தேசத்துக்கு உணவளிக்கும் விவசாயிகள் சிந்திய வேர்வைக்குக் கிடைத்த வெற்றி.

முன்பெல்லாம் வரி செலுத்தும் மக்கள் தங்கள் வரி சரியான பயன்பாட்டில்தான் ஈடுபடுத்தப்படுகிறதா என்பது தெரியாது. இப்போது அவர்களுக்கு அது உறுதியாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தல் சாமானிய மக்களுக்கானது. இந்தியா பார்த்ததிலேயே அதிகம் பேர் வாக்களித்தத் தேர்தலாகும் இது.

ஒடிசா, ஆந்திரா, சிக்கிமில் வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்.  பாஜக ஆளாத மாநிலங்களுக்கும் மத்திய அரசு ஒத்துழைப்பு வழங்கும்.  கூட்டாட்சி தத்துவம், அரசியல் சாசனத்தில் பாஜகவுக்கு முழு நம்பிக்கை இருக்கிறது''.

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close