[X] Close

மக்களவைத் தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை; நாடுமுழுவதும் பலத்த பாதுகாப்பு


  • kamadenu
  • Posted: 23 May, 2019 08:02 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் வேலூர் தவிர நாடுமுழுவதும் 542 தொகுதிகளிலும் பதிவான வாக்குகளை எண்ணணும் பணி தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன.  

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன.

மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் பதிவு செய்துள்ள வாக்குகளும் சர்வீஸ் வாக்குகளாக கணக்கிடப்படும். ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட 18 லட்சம் சர்வீஸ் வாக்காளர்களில் 16.49 லட்சம் பேர்  தபால் வாக்குகளை தங்களது தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த 17-ம் தேதி அனுப்பி உள்ளனர். இந்த வாக்குகளை எண்ணிமுடிக்கப்பட்ட பின்பு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும்.

அதன்பின்னர், பாதுகாப்பு படை யினர் செலுத்திய சர்வீஸ் வாக்குகள் எண்ணப்படும். அதாவது, தங்கள் தொகுதிக்கு வெளியே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவத்தினர், மத்திய, மாநில போலீஸார் ஆகியோர் செலுத்தி யுள்ள வாக்குகள் எண்ணப்படும்.

பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். இது முடிந்தபின்னர், ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன்  சரிபார்க்கப்படும். இவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையே இறுதியானதாக கணக்கில் கொள்ளப்படும். இந்த சரி பார்ப்பு பணி காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் உத்தரவு

வழக்கமாக வாக்குப்பதிவு தொடங்கும்போது  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். மாலைக்குள் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்துவிடும்.

 ஆனால், இந்தத் தேர்தலில் முதல்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் தலா 5 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close