[X] Close

வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பதற்றமான பகுதிகளில் போலீஸார் குவிப்பு; காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்: மக்களவைத் தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும்


8-5

  • kamadenu
  • Posted: 23 May, 2019 06:24 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நாடு முழுவதும் இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. பதிவான வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டுகள் சரிபார்க்கப்படுவதால் முடிவுகள் வெளியாவதில் தாமதமாகும் என்று தேர் தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. தமிழகத்தில் வேலூர் தொகுதியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டு மீதியுள்ள 542 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.   நாடு முழுவதும் 67.11 சதவீத வாக்குகள் பதிவானது. 90.99 கோடி பேர் வாக்களித்தனர்.

இந்தத் தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் முக்கிய போட்டி நிலவியது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் மற்றும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளும் பாஜக கூட்டணியே அதிக இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவித்தன.

இந்நிலையி்ல், மக்களவையின் 542 தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்குகிறது. வழக்கமாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கும்போது  மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். மாலைக்குள் எந்தக் கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று உறுதியாகத் தெரிந்துவிடும். ஆனால், இந்தத் தேர்தலில் முதல்முறையாக ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் தலா 5 வாக்குச்சாவடிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை விவிபாட் ஒப்புகைச் சீட்டுகளுடன் சரிபார்க்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 10.3 லட்சம் வாக்குப்பதிவு மையங்களில் 20,600 இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளையும் விவிபாட் ஒப்புகைச் சீட்டு களையும் சரிபார்க்கும் பணிகள் நடக்க உள்ளன. தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். அதன்பின்னர், பாதுகாப்பு படை யினர் செலுத்திய சர்வீஸ் வாக்குகள் எண்ணப்படும். அதாவது, தங்கள் தொகுதிக்கு வெளியே தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்ட ராணுவத்தினர், மத்திய, மாநில போலீஸார் ஆகியோர் செலுத்தி யுள்ள வாக்குகள் எண்ணப்படும்.

வெளிநாடுகளில் பணியாற்றும் இந்திய அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ஆகியோர் பதிவு செய்துள்ள வாக்குகளும் சர்வீஸ் வாக்குகளாக கணக்கிடப்படும். ஒட்டுமொத்தமாக பதிவு செய்யப்பட்ட 18 லட்சம் சர்வீஸ் வாக்காளர்களில் 16.49 லட்சம் பேர்  தபால் வாக்குகளை தங்களது தொகுதி தேர்தல் அதிகாரிகளுக்கு கடந்த 17-ம் தேதி அனுப்பி உள்ளனர். இந்த வாக்குகளை எண்ணிமுடிக்க 2 மணி நேரமாகும் என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கும். இது முடிந்தபின்னர், ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கை கணக்கிடப்படும். பின்னர், வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன்  சரிபார்க்கப்படும். இவற்றில் ஏதேனும் முரண்பாடு இருந்தால் ஒப்புகைச் சீட்டுகளின் எண்ணிக்கையே இறுதியானதாக கணக்கில் கொள்ளப்படும். இந்த சரி பார்ப்பு பணி காரணமாக தேர்தல் முடிவுகளை அறிவிப்பது 5 மணி நேரம் தாமதமாகும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தலில் உ.பி.யின் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்டார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும் கேரளாவின் வயநாடு தொகுதியிலும் சோனியா காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டனர். மேலும் மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள், சுயேச்சைகள் என மொத்தம் 7,928 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் 724 பேர் பெண்கள். மத்தியில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது இன்று மாலை தெரியவரும்.

4 மாநில பேரவை தேர்தல்கள்

மக்களவைத் தேர்தல்களுடன் ஆந்திரா, ஒடிசா, சிக்கிம், அருணாச்சலபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களின் சட்டப்பேரவை களுக்கும் தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதற்கான வாக்கு எண்ணிக்கையும் இன்று நடக்கிறது. ஆந்திராவில் முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சிக்கும் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கும் முக்கிய போட்டி நிலவுகிறது.

ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் கின் பிஜூ ஜனதாதளம், பாஜக இடையே முக்கிய போட்டி நடக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும் ஒடிசாவில் பிஜூ ஜனதா தளமும் அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கூறப்பட்டது. 4 மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் இன்று மாலை முழுமையாக வெளியாகும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

போலீஸார் குவிப்பு

நாடு முழுவதும் இன்று வாக்கு எண்ணிக்கை நடப்பதை முன்னிட்டு விரிவான முன்னேற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. வன்முறைச் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க பதற்றமான பகுதி களில் போலீஸார் குவிக்கப்பட்டு பாது காப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close