[X] Close

நீங்கள் தேசவிரோதிகளை ஆதரித்தீர்கள்; மக்கள் மோடியை ஆதரித்துள்ளனர்: ஸ்மிருதி இராணி மகிழ்ச்சி ட்வீட்


  • kamadenu
  • Posted: 22 May, 2019 12:43 pm
  • அ+ அ-

-ஏஎன்ஐ

இந்தத் தேர்தலில் மக்கள் தேசவிரோதிகளை வென்றுவிட்டனர்; உண்மையான குடிமகன்களுக்கு நன்றி என மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி ட்வீட் செய்துள்ளார்.

நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. நாளை மே 23 வாக்கு எண்ணிக்கை நடைபெறவிருக்கிறது.  மக்களவைத் தேர்தல் கருத்து கணிப்புகள் பெரும்பாலனவை மீண்டும் மோடி ஆட்சியே அமையும் எனத் தெரிவித்துள்ள நிலையில் நேற்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் தலைவர்களுக்கு விருந்து அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று (புதன்கிழமை) காலை ஸ்மிருதி இராணி தனது ட்விட்டர் பக்கத்தில் வரிசையாக சில ட்வீட்களைப் பகிர்ந்தார்.

அவற்றில் அவர் கூறியிருப்பதாவது:

இன்னும் 24 மணி நேரம்தான் இருக்கிறது. நம்மில் பலரும் நாளை தொலைக்காட்சி முன்பு ஒவ்வொரு வாக்கையும் உற்று கவனித்துக் கொண்டிருப்போம். இந்த தருணத்தை நாட்டின் குடிமக்களுக்கு நன்றி சொல்ல நான் பயன்படுத்திக் கொள்கிறேன். எனது கட்சியையும் என்னையும் அங்கீகரித்தவர்களுக்கு நன்றி.

இந்தத் தேர்தல் தேசத்தை துண்டாட நினைத்தவர்களுக்கும் தேசபக்தர்களுக்கும் இடையேயானது. இந்தியா பிரிந்துவிடும் என கூக்குரலிட்டவர்களுக்கு எதிராக மக்கள் வலுவாக நின்று நிரூபித்துள்ளனர். அத்தகைய குடிமக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா மீதும் அதன் எதிர்காலம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்.

புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்ற கொள்கையுடன் செயல்பட்ட பாஜக அடிமட்ட தொண்டர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி, தன்னலமற்ற போக்கு ஆகியனவற்றைக் கண்டு வியந்து பாராட்டுகிறேன். அவர்கள், அனைவருக்குமான வளர்ச்சி; அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற கோஷத்தை நோக்கி பயணித்தனர்.

அதேவேளையில் மேற்குவங்கம் மற்றும் கேரளாவில் பாஜக தொண்டர்கள் தங்கள் இன்னுயிரை இழந்ததை மறந்துவிட முடியாது. அவர்கள் குடும்பத்தாருக்கு இரங்கல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு நாங்கள் செலுத்தக்கூடிய அஞ்சலி, தேசத்தை வலுவாக கட்டமைப்பதே ஆகும்.

கடந்த 5 ஆண்டுகளில் ஒரே ஒரு நாள்கூட பிரதமர் மோடியைப் பற்றிய விமர்சனங்கள் வெறுப்புப் பிரச்சாரங்கள் எழாமல் இருந்ததில்லை. இருந்தாலும், இந்திய மக்கள் பிரதமரின் பக்கம் நின்றனர் என்பதில் மகிழ்ச்சி.

இவ்வாறு ஸ்மிருதி அடுக்கடுக்கான ட்வீட்களில் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்மிருதி இராணி மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தின் அமேதி தொகுதியிலிருந்து போட்டியிட்டுள்ளார். அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி போட்டியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close