[X] Close

தேர்தல் நடத்தை விதிமுறை: முரண்படும் கருத்துகளுக்கு உத்தரவுகளில் இடமில்லை- தேர்தல் ஆணையம் திட்டவட்டம்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 17:03 pm
  • அ+ அ-

-தேவேஷ் கே.பாண்டே

தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளில் மாறுபட்ட கருத்துகள் இடம்பெற வேண்டுமென்று தேர்தல் ஆணையர் அசோக் லவாசா தலைமைத் தேர்தல் ஆணையருக்கு 3 முறை எழுத்து மூலம் கோரிக்கை வைத்தார். அப்படியில்லை எனில் தான் நடத்தி விதிமுறை நடைமுறைகளிலிருந்து விலகிவிடுவதாகவும் அவர் அந்தக் கடிதங்களில் தெரிவித்திருந்தார்.

 

ஆனால் இந்தக் கோரிக்கைக்கு மாறாக வேறுபட்ட/மாறுபட்ட கருத்துகளுக்கு தேர்தல் நடத்தை விதி உத்தரவுகளில் இடமளிக்கப்பட மாட்டாது என்று 2:1 என்ற பெரும்பான்மை முடிவுகளின் அடிப்படையில் தேர்தல் ஆணையம் இன்று முடிவெடுத்துள்ளது. மாறுபட்ட கருத்துக்கள், உள் கோப்புகளில் இடம்பெறும் அதுதான் நடைமுறை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

இந்த விவகாரம் இன்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தபோது,  பிரதமர் மோடி, அமித் ஷாவின் சில தேர்தல் பிரச்சார உரைகள் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு புறம்பானதாக இருந்ததாக தேர்தல் ஆணையர் லவாசாவின் குற்றச்சாட்டுகள் தேர்தல் ஆணைய உத்தரவுகளில் ஏன் இடம்பெறக் கூடாது, அவை இடம்பெறத்தான் வேண்டும் என்று ஆட்சேபணை வெளியிட்டார்.

 

ஆனால், “இதற்கு முன்னுதாரணம் இல்லை. குறிப்பிட்ட விதிமீறலை சம்பந்தப்பட்டோருக்குத் தெரிவிக்கும் நீதிசாரா தொடர்புப் படுத்துதலில் முரண்பட்ட கருத்துகளை சேர்ப்பது வழக்கமில்லை. கோப்புகளில் மட்டுமே அவை இருக்கும்” என்று தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

 

இந்தக் கருத்தை ஆதரித்து முன்னாள் தேர்தல் ஆணைய சட்ட ஆலோசகர் எஸ்.கே.மெந்திரத்தா கூறும்போது, கருத்து வேறுபாடுகள் தோன்றும்போது மறுப்புக் குறிப்புகள் அல்லது முரண்படும் எதிர்ப்புக் குறிப்புகள் கோப்புகளில்தான் இருக்கும், பெரும்பான்மை கருத்துக்கள் மட்டுமே உத்தரவுகளில் இடம்பெறும் என்று தி இந்து ஆங்கிலம் நாளிதழுக்குத் தெரிவித்தார்.

 

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் சின்னங்கள் தொடர்பான நீதித்துறை சார்ந்த விவகாரங்களில் மட்டும்தான் முரண்பட்ட, மாறுபட்ட கருத்துக்கள் உத்தரவுகளின் அங்கமாக இருக்கும் என்கிறார் அவர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close