சிறுமி கடத்தி கொலை: எலுமிச்சை, குங்குமம் வீசி அதிர்ச்சியளித்த 3 சிறுவர்கள்!


பூங்காவில் மூன்று நாட்களுக்கு முன்பு காணாமல் போன சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம், நந்தியாலா மாவட்டம், பகிடியாலா மண்டலம் முச்சுமரி கிராமத்தில் தான் இந்த கொடூரச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி காணாமல் போனார். இது தொடர்பாக அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த நிலையில், தங்கள் மகளைக் காணவில்லை என்று நந்தியாலா தொகுதியின் எம்.பி பைரெட்டி சபரியிடம், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து எம்.பி-யின் உத்தரவின் பேரில் போலீஸார் விசாரணையைத் தொடக்கினர். கடந்த இரண்டு நாட்களாக கிராமம் முழுவதும் சிறுமியைத் தேடினர். இந்த நிலையில், கால்வாயில் சிறுமியின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்பட்டனர்.

அத்துடன் சிறுமி கொலை செய்யப்பட்ட இடத்தில் அமானுஷ்ய வழிபாடு நடந்ததற்காக அறிகுறிகள் தெரிந்தன. குங்குமம், எலுமிச்சை பழங்கள் அந்த பகுதியில் கிடந்தன. அதனால் சிறுமியை யாராவது கடத்தி பூஜை நடத்திய பின்பு கொலை செய்தார்களா என போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது இந்த சம்பவத்தில் மூன்று சிறுவர்கள் ஈடுபட்டது தெரிய வந்தது.

அவர்களைப் பிடித்து விசாரணை நடத்திய போது, பூங்காவில் இருந்து சிறுமியை கடத்திக் கொண்டு சென்று பலாத்காரம் செய்தது தெரிய வந்தது. சிறுமியை உயிரோடு விட்டால் வெளியே விஷயத்தைச் சொல்லி விடுவார் என்று கொலை செய்து உடலை கால்வாயில் அவர்கள் வீசியுள்ளனர். மேலும் கொலை சம்பவத்தை மறைக்க அமானுஷ்ய வழிபாடு நடந்ததைப் போல அடையாளங்களை உருவாக்கியது போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.

குற்றவாளிகள் கூறிய விவரத்தின்படி, நந்தியாலா மாவட்ட எஸ்.பி- ரகுவீர் ரெட்டி இவ்வழக்கை விசாரணை நடத்தி வருகிறார். இக்கொலை குறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.