[X] Close

தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானால்? பிரதமராக வாய்ப்பு தேடும் சரத் பவார்


  • kamadenu
  • Posted: 21 May, 2019 16:31 pm
  • அ+ அ-

-ஆர்.ஷபிமுன்னா

தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு சாதகமானால், அதன் சார்பில் பிரதமராக சரத் பவார் வாய்ப்பு தேடுகிறார். அவர் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகளுடன் நல்லுறவில் இருப்பது அதன் பின்னணி ஆகும்.

பாஜக தலைமையில் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு (என்டிஏ) 2014-ல் கிடைத்த அளவிற்கு இத்தேர்தலில் ஆதரவு இல்லை. அதேசமயம், தேசிய அளவில் காங்கிரஸுக்கும் ஆதரவு பெரிய அளவில் தெரியவில்லை.

 தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் என்டிஏவிற்கு ஆதரவாக வெளியாகி, எதிர்க்கட்சிகளை சோகத்தில் ஆழ்த்திவிட்டது. எனினும், கடந்த காலங்களில் சிலமுறை நிகழ்ந்தது போல் இந்தமுறையும் அந்தக் கணிப்புகள் தவறும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தாம் எதிர்பார்ப்பது போல் சாதகமான நிலை ஏற்பட்டால் சில முக்கிய எதிர்க்கட்சிகள், ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்பது சிரமமே.

இச்சூழலில் எதிர்க்கட்சிகளிடம் நீண்ட பிரதமர் பட்டியல் உள்ளது. பகுஜன் சமாஜின் மாயாவதி, திரிணமூல் காங்கிரஸின் மம்தா பானர்ஜி, தேசியவாதக் காங்கிரஸின் சரத் பவார் எனப் பட்டியல் நீள்கிறது. இவர்களில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மூன்றுமுறை முதல்வராக இருந்த சரத் பவார் தனிப்பட்ட முறையில் அதற்கு வாய்ப்பு தேடத் தொடங்கியுள்ளார்.

சரத் பவாரை பிரதமராக மாநில, பிராந்தியக் கட்சிகளுடன் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் இடதுசாரிகளும் கூட ஏற்கும் வாய்ப்புகள் தெரிகின்றன. இதற்கு ஏற்ப அவர் மாயாவதி, மம்தா, லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ், சந்திரபாபு நாயுடு, நவீன் பட்நாயக், மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் மு.க.ஸ்டாலின் என அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களுடனும் நல்லுறவைப் பேணுகிறார். 

1999-ல் பிரதமர் வாஜ்பாய் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்கு சரத் பவார் ஆதரவளிக்க மாட்டார் என பாஜக நம்பியது. ஆனால், மாயாவதி கோரியதற்கு இணங்க சரத் பவாரும் வாஜ்பாய் பதவி இழக்கக் காரணமானார்.  இதன் பலன் அவருக்கு பிரதமர் வாய்ப்பு கிடைக்க உதவும் என்பது சரத் பவாரின் எதிர்பார்ப்பாகி விட்டது. சோனியா ஒரு வெளிநாட்டவர் என எழுந்த பிரச்சினையில் பி.ஏ.சங்மா, தாரீக் அன்வர் ஆகியோருடன் காங்கிரஸால் நீக்கப்பட்டு 1999-ல் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தொடங்கியவர் சரத் பவார். 

ஆனால், அதே வருடம் மகாராஷ்டிராவில் சிவசேனாவுடன் பாஜக இணைந்து அமையவிருந்த ஆட்சியை காங்கிரஸுடன் சேர்ந்து தடுத்தார் சரத் பவார். அப்போது முதலாகவே அவரது சோனியா எதிர்ப்பை  காங்கிரஸ் மறந்து விட்டது.  இதனால், அக்கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டுமுறை ஆட்சியிலும் சரத் பவார் மத்திய அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தார்.

என்டிஏவின் உறுப்பினர்களான உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பிரகாஷ்சிங் பாதலின் சிரோமணி அகாலி தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜன சக்தியிடமும் கூட சரத் பவாருக்கு நட்பு உள்ளது. 2015-ல் மகராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவிற்குப் பின் சிவசேனா ஆட்சி அமைத்தால் ஆதரவளிக்கத் தயார் என அறிவித்திருந்தார்.

இதனால், அவர் ஆளும் கட்சி ஆதரவாளர் எனும் சந்தேகமும் எதிர்க்கட்சிகளிடம் இருந்தது உண்டு. ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிரா நவ்நிர்மான் சேனா மற்றும் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் போன்ற சிறிய கட்சித் தலைவர்களையும் சரத் பவார் விட்டு வைக்கவில்லை. இவர்களையும் தான் மக்களவைத் தேர்தலுக்காக இடம்பெற்ற காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் சேர்க்க அரும்பாடுபட்டார். முக்கியமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் சரத் பவாருக்கு நெருக்கமான நட்பு உருவானது.

கிரிக்கெட் சங்கத்தின் தலைவராகவும் பல வருடங்கள் இருந்த சரத் பவாரின் பலத்தை நிரூபிக்கும் வகையில், மூன்று வருடங்களுக்கு முன் வந்த அவரது 75 பிறந்த நாள் விழா அமைந்தது.  டெல்லியின் விக்யான் பவனில் கொண்டாடப்பட்டதற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி ஆகியோருடன் இடது, வலது மற்றும் நடுப்புறம் என அனைத்துவகை கொள்கைகள் கொண்ட கட்சிகளின் தலைவர்களும் ஆஜராகி இருந்தனர்.

எனவே, என்டிஏ, காங்கிரஸ் கூட்டணி, மூன்றாவது அணி என எவருக்கும் வாய்ப்பில்லாமல் தொங்கு நாடாளுமன்றம் வந்தால் பிரதமராகும் வாய்ப்புகளைத் தேடுகிறார் சரத் பவார் எனக் கூறலாம். இதற்கான முக்கியத் தகுதியாக சரத் பவாருக்கு இந்தியப் பெருநிறுவனங்களின் தொழிலதிபர்களுடனும் நல்லுறவு உண்டு.

மற்ற அரசியல் கட்சித் தலைவர்களைப் போல் அவர் அநாவசியமாக யாரைப் பற்றியும் கடுமையாக விமர்சித்ததில்லை. சரத் பவாரின் மனதில் உள்ள விருப்ப, வெறுப்புகள் என்ன என்பதும் வெளியில் தெரியும்படி அவர் பேசி சர்ச்சையாகவில்லை. இவரிடம் ஒவ்வொரு தலைவரும் பகிரும் ரகசியங்களைக் காப்பதில் சரத் பவாருக்கு நிகர் அவரே. இதனால் அவர் அனைத்து தரப்பு அரசியல் கட்சித் தலைவர்கள் இடையேயும் மதிக்கப்படுகிறார்.

2017-ல் பத்மவிபூஷண் பெற்ற சரத் பவார் பிரதமர் ஆவதற்கு சில தடைகளும் இல்லாமல் இல்லை. அவற்றில் முக்கியமான இரண்டில் ஒன்றாக அவரது உடல்நிலை உள்ளது. மற்றொன்று அவரது கட்சிக்கு கிடைக்கும் குறைந்த தொகுதிகள்.  மத்திய அரசின் பல்வேறு முக்கிய குழுக்களிலும் பதவி வகித்த சரத்பவாருக்கு உச்சபட்ச பதவிகளில் தீராத மோகம் உண்டு. 1997-ல் காங்கிரஸ் தலைவராகப் போட்டியிட்டவர் சீதாராம் கேசரியிடம் தோல்வி அடைந்தார்.

பிறகு, பல ஆண்டுகள் கழித்து குடியரசுத் தலைவர் பதவிக்கு அடிகோலியவருக்கு அப்பதவி கிடைக்கவில்லை. பிறகு  குடியரசு துணைத் தலைவருக்கு முயன்றும் சரத் பவாருக்கு கிடைத்தது தோல்வியே.

ஆனால் இந்த முறை பிரதமர் பதவிக்கான வாய்ப்பு கிடைத்தால் அதை சரத் பவார் விடத் தயாராக இல்லை. இதற்காக அவரது கட்சியை காங்கிரஸுடன் இணைக்கும் கட்டாயம் ஏற்பட்டாலும் அதை சரத் பவார் செய்வார்.  ஏனெனில், அவரது 52 ஆண்டுகால அரசியல் வாழ்வில் சரத் பவாருக்கு கிடைக்கும் கடைசி வாய்ப்பு ஆகும். இதற்கான விடை, மே 23-ல் வெளியாகும் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close