[X] Close

அடுத்து ஆட்சி அமைப்பது யார்? டெல்லியில் இன்று 21 எதிர்க்கட்சித் தலைவர்கள் முக்கிய ஆலோசனை: தேர்தல் ஆணையத்துடன் சந்திப்பு


21

  • kamadenu
  • Posted: 21 May, 2019 13:49 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

மக்களைத் தேர்தல் முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகும் நிலையில், மத்தியில் பாஜக அல்லாத ஆட்சி அமைப்பதற்கான சாதகமான அம்சங்களை ஆலோசிப்பதற்காக எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மற்றும் வாக்கு ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்த உள்ளனர்.

7 கட்டங்களாக நடந்த மக்களவைத் தேர்தல் கடந்த 19-ம் தேதியுடன் முடிந்துவிட்டது. வரும் 23-ம் தேதி 542 தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்துள்ளன.

ஆனால், இந்த கருத்துக்கணிப்புகளை மறுக்கும் எதிர்க்கட்சிகள், மத்தியில் பாஜக அல்லாத ஆட்சியை அமைக்க மும்முரமாக ஈடுபட்டுள்ளன. இதற்கான பணியில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில நாட்களாக பல்வேறு கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசினார். அதன்பின் சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி ஆகியோரைச் சந்தித்து சந்திரபாபு நாயுடு பேசினார்.

இந்த சூழலில் தேர்தல் முடிவுகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு போதிய இடங்கள் கிடைக்காவிட்டால் என்ன செய்ய வேண்டும், எவ்வாறு விரைவாக செயல்பட்டு ஆட்சி அமைப்பதற்கான பணிகளில் ஈடுபட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்களை ஆலோசிக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்துகின்றனர்.

இந்த கூட்டத்தில் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, தேசிய மாநாட்டுக் கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், லோக் தந்ரிக் ஜனதா தளம், தெலுங்குதேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் , திரிணமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

காங்கிரஸ் சார்பில் அகமது படேல், குலாம்நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் சதீஸ் சந்திர மிஸ்ரா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா, திரிணமூல் காங்கிரஸ் சார்பில் டெரிக் ஓ பிரையன் , சரத்யாதவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

_8b8e3cf6-7b79-11e9-8a88-8b84fe2ad6da.jpg 

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவித்திருந்தாலும், கடந்த காலங்களில் கருத்துக்கணிப்புகள் பொய்யானதை எதிர்க்கட்சித் தலைவர்கள் உதாரணமாக காட்டுகின்றனர். ஆஸ்திரேலியாவில் வந்தது போன்று வியக்கவைக்கும் முடிவுகள் வரலாம் என்றும் கூறுகிறார்கள்.

இதற்கிடையே சமாஜ்வாதிக் கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், முதல்வர் மம்தா பானர்ஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நேற்று பேசியுள்ளார். அப்போது, அரசியல் நிலவரம், மெகா கூட்டணி வாக்கு விவரம், தேர்தல் முடிவுகள், தேர்தல் முடிவுகளுக்குப் பின் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்ததாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வந்தபின், எதிர்க்கட்சிகள் மத்தியில் எச்சரிக்கையான உணர்வு அதிகரித்து, நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளன. அதன் ஒருபகுதிதான் இன்று நடக்கும் கூட்டம்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளிடம் இருந்து ஆதரவு கடிதங்களைப் பெற்று, ஒருவேளை யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், அந்த கடிதங்களை குடியரசுத் தலைவரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோர திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்தவிதமான வாய்ப்பையும் பாஜகவுக்கு விட்டுவிடக்கூடாது என்பதில் எதிர்க் கட்சித் தலைவர்கள் விழிப்பாக இருந்து வருகிறார்கள். மேலும், ஆட்சி அமைக்கும் விஷயத்தில் எந்தவிதமான தாமதமும் செய்துவிடக்கூடாது என்பதால்தான் இப்போதே ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி கருத்தொற்றுமையை ஏற்படுத்த முயன்று வருகின்றனர்.

இதுதவிர இன்று தலைமைத் தேர்தல் ஆணையத்தையும் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்திக்கின்றனர். ஏதாவது ஒரு வாக்குச்சாவடியில் வாக்கு எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையையும், வாக்கு தணிக்கை எந்திரத்தில் உள்ள எண்ணிக்கையையும் சரிபார்க்கும் போது வேறுபாடு ஏற்பட்டால், ஒட்டுமொத்த தொகுதிக்கும் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வைக்க உள்ளார்கள்.

வாக்களிக்கலாம் வாங்க

'தும்பா' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close