[X] Close

உ.பி. பிஹாரில் நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம்: பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர்  எதிர்ப்பு


  • kamadenu
  • Posted: 21 May, 2019 12:24 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

உத்தரப்பிரதேசம் மற்றும் பிஹார் மாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் வாக்குப்பதிவு எந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பகுஜன்சமாஜ், சமாஜ்வாதிக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

உ.பி. மாநிலம் காஜிப்பூர் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அப்சல் அன்சாரி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறையில் இருந்து வாகனத்தில் ஏற்றும்போது நேற்று இரவு எதிரிப்புத் தெரிவித்து போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோவும் வைரலாகியது.

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக முடிந்து நாளைமறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளநிலையில், திடீரென வாக்கு எந்திரங்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.

இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் அன்சாரி நிருபர்களிடம் கூறுகையில், " வாக்குப்பதிவு எந்திரங்களை நள்ளிரவில் இடமாற்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன. இடமாற்றம் செய்யப்படவில்லை, வாக்கு எந்திரங்கள் மாற்றப்படுகின்றன. எந்த கட்சியின் வேட்பாளர்களுக்கும் முன்னறிவிப்பு ஏதும் செய்யாமல் வாக்கு எந்திரங்கள் மாற்றப்படுகின்றன. 

வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாக, மிகப்பெரிய மோசடியில் ஈடுபடுகிறார்கள். இந்த இடத்தை விட்டு அகலமாட்டேன். இங்குமட்டுமல்ல மாநிலத்தின் பல தொகுதிகளிலும், பிஹாரிலும் இதுபோன்று நள்ளிரவில் வாக்கு எந்திரங்கள் மாற்றப்படுவதாக தகவல் வந்துள்ளது. மாவட்ட நிர்வாகத்தின் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. ஆதலால், வாக்குப்பதிவு எந்திரங்கள் வைத்திருக்கும் அறையின் முன் அமரப்போகிறோம்" எனத் தெரிவித்தார்.

அன்சாரி நள்ளிரவில் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து, ஜாங்கிபூப் எம்.எல்எல் வீரேந்திரா, ஜக்கானியா எம்எல்ஏ திரிவேனி ராம் ஆகியோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

பகுஜன் சமாஜ் வேட்பாளர் அன்சாரி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

mau.jpg 

ஆனால், காஜிப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். வாக்கு எந்திரங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. எந்தவிதமான பாதுகாப்பு குறைபாடுகளும் இல்லை என்று காஜிப்பூர் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட 21 எதிர்க்கட்சிகள் இன்று  தேர்தல் ஆணையத்தை இன்று சந்திக்க இருக்கும் நிலையில் இந்த குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பிஹார் மாநிலத்தில் மகாராஜ்கன்ஜ், சரண் மக்களவைத் தொகுதியில் நள்ளிரவில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வாக்கு எந்திரங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதாக ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி புகார் எழுப்பியுள்ளது.

இது குறித்து பிஹார் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் கூறுகையில், " வடஇந்தியா முழுவதும் வாக்கு எந்திரங்கள் நள்ளிரவில் திடீரென இடமாற்றம் செய்யப்படும் வீடியோக்கள் வருகின்றன. ஏன் இடமாற்றம் செய்யப்படுகிறது. இந்த வாக்கு எந்திரங்களை யார் இடமாற்றம் செய்வது. எந்த காரணத்துக்காக இடமாற்றம் செய்கிறார்கள், அதன் நோக்கம் என்ன. குழப்பத்தையும், தவறான புரிதலையும் தவிர்க்கும் நோக்கில், தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் " எனத் தெரிவித்துள்ளார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close