பேய் இருப்பதால் பள்ளிக்கு வரமாட்டோம்: பிடிவாதம் பிடித்த மாணவர்கள்


பேய் இருப்பதால், பள்ளிக்கு வரமாட்டோம் என்று பிடிவாதம் பிடித்த மாணவர்களுக்கு ஆசிரியர் ஒருவர் செய்த காரியம் தைரியத்தை உருவாக்கியுள்ளது.

தெலங்கானா மாநிலம், அடிலாபாத் மாவட்டம், ஜைனாத் மண்டலலில் ஆனந்த்பூர் தொடக்க பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாணவர்கள் பீதியில் இருந்தனர். அதாவது, பள்ளியில் உள்ள ஒரு அறையில் பேய் இருப்பதாக மாணவர்கள் நம்பினர். அந்த அறையில் இருந்து திடீர் திடீர் என சத்தம் வருவதாக அவர்கள் புகார் கூறினர். இதனால் பள்ளிக்கு வரப் பயந்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து வந்தது.

பேய் என்பதெல்லம் பொய் என்று மாணவர்களிடம் ஆசிரியர்கள் போதித்தும், அதை அவர்கள் கேட்கவில்லை. இதனால் மாணவர்கள் மத்தியில் உள்ள அச்ச உணர்வை போக்க வேண்டும் என்று பள்ளி தலைமை முடிவு செய்தது. அதன்படி ரவீந்தர் என்ற ஆசிரியர் பள்ளியில் மாணவர்கள் குறிப்பிட்ட அறையில் இரவு முழுவதும் தங்கினார். அடுத்த நாள் காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவர்கள் ஆசிரியர் பத்திரமாக இருப்பதைப் பார்த்து, ”பேய் இல்லை, எனவே, பள்ளிக்கு வருகிறோம்” என்று கூறினார்கள். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பாழாகி விடுமோ என்ற பயந்த பெற்றோர், ஆசிரியர் ரவீந்தரின் முயற்சியால் தங்கள் குழந்தைகளிடம் இருந்த அச்ச உணர்வு நீங்கியுள்ளது என்று அவருக்குப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளனர்.