[X] Close

டெல்லியில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு அமித் ஷா இன்று விருந்தளிக்கிறார்: ஆட்சி அமைப்பது தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசனை


  • kamadenu
  • Posted: 21 May, 2019 06:47 am
  • அ+ அ-

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக் கும் என்று பெரும்பாலான தேர்தலுக் குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்துள்ள நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்று டெல்லியில் விருந்தளிக்கிறார். இதில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். ஆட்சி அமைப் பது தொடர்பான வியூகங்கள் குறித்து அப்போது ஆலோசிக்கப் படுகிறது.

மக்களவைக்கு ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே மாதம் 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டன. பிரதமர் நரேந்திர மோடி போட்டியிட்ட உத்தரபிரதேசத் தின் வாரணாசி தொகுதி உட்பட 59 தொகுதிகளுக்கு நேற்று முன்தினம் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறை வடைந்தது. தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இறுதிக்கட்ட வாக் குப் பதிவு முடிந்த ஒரு மணி நேரத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை பல்வேறு ஊடகங்கள் நேற்று முன்தினம் மாலை வெளியிட் டன. இதில் எல்லா கருத்துக் கணிப்பு களிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டது. பாஜக கூட்டணி அதிகபட்சமாக 336 இடங்கள் வரை வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும் பாஜக தனிப்பெரும் கட்சியாக உரு வெடுக்கும் என்றும் கூறப்பட்டது.

எதிர்க்கட்சிகள் சுணக்கம்

இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எதிர்க்கட்சிகளி டையே சுணக்கத்தை ஏற்படுத்தி உள் ளன. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி கள் கருத்துக் கணிப்புகளை நம்ப முடியாது என்று தெரிவித்துள்ளன. கடந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல், தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவார், சமாஜ்வாதி தலைவர் அகி லேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களை தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார். நேற்று டெல்லியில் சோனியா காந்தியை மாயாவதி சந்தித்து ஆலோசனை நடத்து வார் என்று செய்திகள் வெளியானது. ஆனால், தேர்தலுக்குப் பிந்தைய கருத் துக் கணிப்புகள் வெளியான நிலையில், சோனியா காந்தியை மாயாவதி சந்திக்க மாட்டார் என்று பகுஜன் சமாஜ் கட்சி தெரிவித்தது.

இதற்கிடையே, உ.பி. தலைநகர் லக்னோவில் அகிலேஷ் யாதவும் மாயாவதியும் நேற்று சந்தித்துப் பேசி னர். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் குறித்து இருவரும் ஆலோ சித்ததாகத் தெரிகிறது. எனினும், இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர் களை சந்திப்பதை இருவரும் தவிர்த்து விட்டனர்.

மேலும், தேர்தல் முடிவுகள் வெளி யாகும் 23-ம் தேதி, டெல்லியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி மற்றும் பாஜக கூட்டணியில் இல்லாத கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை சோனியா காந்தி கூட்டியிருந்தார். தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ள நிலையில், இந்தக் கூட்டமும் தள்ளிப் போகலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாஜக சுறுசுறுப்பு

அதேநேரம், தேர்தலுக்குப் பிந் தைய கருத்துக் கணிப்புகள் தந்துள்ள நம்பிக்கையால் பாஜக சுறுசுறுப்படைந் துள்ளது. இந்நிலையில், டெல்லியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா இன்று விருந்தளிக்கிறார். இதில் கலந்து கொள்ளுமாறு அதிமுக, பாமக, தேமுதிக, சிவசேனா, ஐக்கிய ஜனதாதளம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட் டது. இதை ஏற்று, இன்று அமித் ஷா அளிக்கும் விருந்தில் தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மேலும், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், ஆட்சி அமைப்பது தொடர்பான வியூ கங்கள் ஆகியவை குறித்து அப் போது பாஜக கூட்டணித் தலைவர் கள் ஆலோசிப்பார்கள் என்று கூறப் படுகிறது. பாஜகவுக்கு கடந்த மக் களவைத் தேர்தலில் தனிப்பெரும் பான்மை கிடைத்தது. எனினும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டு கூட்டணி ஆட்சி அமைத்தது.

இம்முறையும் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைத்தாலும் கூட் டணி ஆட்சியே அமைப்போம் என்று பாஜக தலைவர் அமித் ஷா ஏற் கெனவே தெரிவித்திருந்தார். ஒரு வேளை, இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காமல், தே.ஜ. கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்தால் கூட்டணிக் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தி ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவரிடம் உரிமை கோருவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close