[X] Close

மத்தியப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பம்: சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்; ஆளுநருக்கு பாஜக கடிதம்


  • kamadenu
  • Posted: 20 May, 2019 16:09 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

மத்தியப் பிரதேச அரசியலில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் காங்கிரஸ் பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரி ஆளுநருக்கு பாஜக கடிதம் எழுதியுள்ளது. இதனால், மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருந்துவரும் கமல் நாத் அரசுக்கு திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக பாஜக சார்பில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு செயல்பட்டு வந்தது. சமீபத்தில் நடந்த தேர்தலில் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றி, காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது.

மாநில சட்டப்பேரவையில் மொத்தம் 230 இடங்கள் உள்ளன. இதில் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும் வென்றன. பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ்வாதி ஒரு இடத்திலும் வென்றது. சுயேட்சைகள் 4 இடங்களில் வென்றனர். இப்போது கமல் நாத் அரசு மாயாவதி, அகிலேஷ் யாதவ், சுயேட்சை துணையுடன் ஆட்சியில் நீடித்து வருகிறது.

இந்நிலையில், மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியில் இருந்து வரும் காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவை இழந்துவிட்டது. ஆதலால்,  பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் எனக் கூறி தற்போது பாஜக புதிய பிரச்சினையைக் கிளப்பியுள்ளது.

இதற்காக சிறப்பு கூட்டத்தொடரையும் கூட்ட வேண்டும் என்று ஆளுநர் ஆனந்தி பென் படேலுக்கு பாஜக எதிர்க்கட்சித்தலைவர் கோபால் பார்கவ் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவ் நிருபர்களிடம் கூறுகையில், "மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ்  3 இடங்களில் கூட வெற்றி பெறாது. 2014-ம் ஆண்டு கருத்துக் கணிப்புகளில் கிடைத்த அதே முடிவுகள் இப்போதும் வரும். பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்து மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும்.

வாக்காளர்கள் சட்டப்பேரவையில் பாஜக தோல்விக்கு பழிவாங்கும் வகையில் இந்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கவில்லை. மக்களின் ஆதரவை காங்கிரஸ் இழந்துவிட்டது. ஆதலால், விவசாயிகள் கடன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கவும், பெரும்பான்மையை நிரூபிக்கவும் சட்டப்பேரவையைக் கூட்டக் கோரி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இதற்கிடையே பாஜகவின் இந்த முடிவை கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, இது மாநிலத்தில் உள்ள ஆட்சியை சிதைக்கும் முயற்சி என்று தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் தீபக் பபாரியா கூறுகையில், " மத்தியப் பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் அரசை முறைகேடான வழிகளில் மூலம் சிதைக்க முயல்கிறது பாஜக. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு சாதகமாக அளித்த தீர்ப்பை அழிக்க பாஜக முயற்சிக்கிறது. மக்கள் ஒருபோதும் பாஜகவை மன்னிக்க மாட்டார்கள். பாஜகவின் கொள்கைகளை மக்கள் ஒதுக்கி, ஊழல் அரசு என்று ஆட்சியில் இருந்து இறக்கிவிட்டார்கள்" எனத் தெரிவித்தார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close