[X] Close

பணமதிப்பிழப்பும், தேர்தல் நிதிப் பத்திரங்களும் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன: சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு


  • kamadenu
  • Posted: 18 May, 2019 19:54 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையும், தேர்தல் நிதிப்பத்திரங்களும் பாஜக ஆட்சியில் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன, புதிய ரூ.500, ரூ.2000 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் நோக்கமே வாக்குகளை விலைக்கு வாங்கத்தான் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டினார்.

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. நாளை 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அடுத்தகட்டமாக புதிய அரசு அமைப்பது தொடர்பாகவும், தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி தொடர்பாகவும் இப்போதே ஆலோசனைகளை தொடங்கியுள்ளன.

பாஜகவுக்கு எதிராக கூட்டணியை அமைக்கும் நோக்கில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் களமிறங்கியுள்ளார். மாநில கட்சிகளின் கூட்டத்தை டெல்லியில் நடத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவர் சந்தித்து பேசினார். மேலும், சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி ஆகியோரை இன்று சந்திரபாபு நாயுடு சந்தித்துப் பேசினார்.

naidu.jpg 

அதன்பின் டெல்லியில் உள்ள இந்திய சர்வதேச மையத்தில் தேர்தல் ஆணையத்தின் சுதந்திரம் மற்றும் தேர்தல் முறை குறித்த கூட்டம் நடந்தது. இதில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோக்கூர், முன்னால் தேர்தல் ஆணையர் நவீன் சாவ்லா, எஸ்.ஒய்.குரோஷி, ஹபிபுல்லா , ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் கே.ராஜூ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:

பிரதமர் மோடி கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, தேர்தல் நிதிப்பத்திரங்கள் போன்ற தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

பிரதமர் மோடி ஏன் நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை கொண்டு வந்து ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என அறிவித்தார். புதிய ரூ500, ரூ.2000 நோட்டுகளை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் மக்களிடம் இருந்து வாக்குகளை விலைக்கு வாங்கும் நோக்கம்தான் என்பது தெளிவாகத் தெரிகிறது.

தபால் வாக்குகள் செலுத்துவோர் யாரெல்லாம் பணத்தை எதிர்பார்க்கிறார்களோ அவர்களிடம் இந்த  பணத்தை கொடுத்து வாக்குகளை வாங்க பாஜகவினர் திட்டமிட்டார்கள்.

அரசியல் கட்சிகள் நிதி பெற தேர்தல் நிதிப்பத்திரங்கள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்த திட்டத்தின் மூலம் சில கட்சிகள் மட்டுமே ஆதாயம் அடைந்தன, பெரும்பகுதி தேர்தல் நிதியை பாஜகதான் பெற்றது.

தேர்தலில் யார் வெற்றி பெறுவது, தோல்வி அடைவது என்பது விஷயமல்ல தேர்தல் நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடக்க வேண்டியதை உறுதி செய்வது அவசியம்.

 தேர்தல் ஆணையம் வாக்கு தணிக்கை எந்திரங்களில் 50 சதவீதத்தை சரிபார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, அதற்கு மறுப்புத் தெரிவித்தது. மாறாக, அவ்வாறு 50 சதவீதத்தை சரிபார்க்க 6 நாட்கள் ஆகும் தேர்தல் முடிவும் தாமதமாகும் என்று உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வாக்கு தணிக்கை எந்திரத்தில் வாக்குகளை தணிக்கை செய்யும் போது, வாக்கு எந்திரத்தையும் உடன் வைத்திருக்க வேண்டும். வாக்கு எண்ணும் அதிகாரி, பார்வையாளர் அதிகாரி ஆகியோர் முன்னிலையில் மிகுந்த வெளிப்படையாக நடத்துவது அவசியம்.

முதலில் வாக்கு எண்ணிக்கையை முடித்துவிட்டு, ஒரு தொகுதிக்கு 5 மையங்களில் உள்ள வாக்கு தணிக்கை எந்திரங்களை வரிசையாக ஆய்வு செய்யாமல் ஏதாவது ஒன்றை எடுத்து தணிக்கை செய்தால்தான் அதை சரிபார்க்க முடியும்.  இதை அனைத்து தொகுதிகளுக்கும் இதை விரிவு படுத்த வேண்டும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

வாக்களிக்கலாம் வாங்க

'கேம் ஓவர் ' உங்கள் ஸ்டார் ரேட்டிங் என்ன?

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close