[X] Close

தேர்தல் முடிவுகள் கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா?- முதல்வர் பதவிக்கு மோதிக்கொள்ளும் ஜேடிஎஸ்-காங்.


  • kamadenu
  • Posted: 18 May, 2019 14:52 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் மத்தியில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ கர்நாடகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முதல்வர் பதவியைத் தக்கவைக்க ஜேடிஎஸ் கட்சியும், முதல்வர் பதவியில் ஆதிக்கம் செலுத்த காங்கிரஸ் கட்சியும் போட்டிபோட்டு வருவதால், தேர்தல் முடிவுகளை இரு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்களும். பாஜகவினரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு மே மாதம் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை கிடைக்கவில்லை. 225 இடங்கள் கொண்ட கர்நாடகத்தில் ஆட்சி அமைக்க 113 எம்எல்ஏக்கள் தேவை. ஆனால், 104 எம்எல்ஏக்கள் வைத்திருந்த பாஜக ஆட்சி அமைக்க முயன்றும் தோல்வி அடைந்தது.

இதையடுத்து, தேர்தலில் எதிர்துருவங்களாக இருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கட்சி கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது. ஜேடிஎஸ் கட்சிக்கு 37 இடங்கள் மட்டுமே இருந்தபோதிலும் பாஜகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்ற நோக்கில், 77 எம்எல்ஏக்கள் வைத்திருந்த காங்கிரஸ் கட்சி முதல்வர் பதவியை குமாரசாமிக்கு விட்டுக்கொடுத்தது.

ஆனால், முதல்வராக ஹெச்டி குமாரசாமி வந்த பின் காங்கிரஸ் கட்சிக்கும், ஜேடிஎஸ் கட்சியினருக்கும் இடையே மறைமுகமான விமர்சனங்கள் தொடர்ந்து வந்தன. இதை பல நேரங்களில் முதல்வர் குமாரசாமியே வெளிப்படையாகத் தெரிவித்து கண்ணீர் விட்டார். தன்னை காங்கிரஸ் கட்சியினர் மதிக்கவில்லை என்று ஆதங்கப்பட்டார்.

சித்தராமையா தான் எங்கள் முதல்வர் என்று காங்கிரஸ் கட்சியினர் சிலர் வெளிப்படையாகப் பேசி குமாரசாமிக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தினார்கள். அவ்வப்போது காங்கிரஸ் தலைமை தலையிட்டு பதற்றத்தைத் தணித்து வந்தது. 5 ஆண்டுகளை நிறைவு செய்வோம் , கூட்டணியில் குழப்பம் ஏற்படாது என்று காங்கிரஸ் கட்சியும் உறுதியளித்துள்ளது.

இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 28 மக்களவைத் தொகுதிகளிலும் இரு கட்சியினரும் இணைந்து போட்டியிட்டனர். காங்கிரஸ் கட்சி 21 இடங்களிலும், ஜேடிஎஸ் கட்சி 7 இடங்களிலும் போட்டியிட்டன. இதோடு சட்டப்பேரவையில் தற்போது சபாநாயகர் மற்றும் சுயேட்சை ஆகிய இரு இடங்கள் காலியாக இருப்பதால், குண்டகோலா, சின்சோலி ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது.

இதனால், மக்களவைத் தேர்தல் முடிவுகளையும், மாநிலத்தில் இரு இடங்களுக்கு நடந்த இடைத்தேர்தல் முடிவுகளையும் காங்கிரஸ், ஜேடிஎஸ், மற்றும் பாஜகவினர் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

kar pol.jpg 

காங்கிரஸ் கட்சியும், ஜேடிஎஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சியில் இருந்தாலும் இவர்களுக்குள் எப்போது குழப்பம் ஏற்படும், ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற எதிர்பார்ப்புடன் பாஜக காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அதிருப்தி எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க பாஜக பல்வேறு செயல்களைச் செய்து வருகிறது. தேர்தல் பிரச்சாரங்களில்கூட மாநில  பாஜக தலைவர் எடியூரப்பா பேசுகையில், மக்களவைத் தேர்தலுக்குப் பின் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று சூசகமாகத் தெரிவித்தார்.

அதற்கு ஏற்றார் போல், ஜேடிஎஸ் கட்சியினரும், காங்கிரஸ் கட்சியினரும் அடிமட்டத் தொண்டர்கள் அளவில் இந்தத் தேர்தலில் இணைந்து பணியாற்றவில்லை. ஒருவரை ஒருவர் கவிழ்ப்பதற்கு வாய்ப்பு தேடி அலைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருகட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் வரை உரசல் போக்கு இருந்து வருகிறது.

இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் ஜி.மதுசூதனன் கூறுகையில், "எதிர் துருவங்களாக இருந்த ஜேடிஎஸ், காங்கிரஸ் இணைந்து அறத்துக்கு மாறான கூட்டணியை அமைத்து ஆட்சியைப் பிடித்தன. ஆனால், அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது. இது தேர்தல் காலத்தில் இரு கட்சிகளின் தலைவர்கள் மத்தியில் தெளிவாகத் தெரிந்து, அடுத்த முதல்வர் யாராக இருப்பார், ஆட்சி நீடிக்குமா என்றெல்லாம் பேசினார்கள். நாளை நடக்கும் இடைத் தேர்தலில் கிடைக்கும் வெற்றியைப் பொறுத்து குமாரசாமியின் எதிர்காலம் முடிவு செய்யப்படும்" என்றார்.

கர்நாடக அரசியல் குறித்து அரசியல் ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், "மாநிலத்திலும், தேசிய அளவிலும் காங்கிரஸ் கட்சி எவ்வாறு தேர்தலில் வெற்றி பெறுகிறது என்பதைப் பொறுத்துதான் குமாரசாமியின் ஆட்சியின் வாழ்நாள் முடிவு செய்யப்படும். ஒருவேளை மாநிலத்தில் பாஜக அதிக இடங்களில் வென்றால், நிச்சயம் காங்கிரஸ், ஜேடிஎஸ் கூட்டணி உடையும். காங்கிரஸ் கட்சியில் இப்போது இருக்கும் பல அதிருப்தி எம்எல்ஏக்கள் விலகி பாஜக செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால், மாநிலத்தில் மீண்டும் அரசியல் குழப்பம், மாற்றம் ஏற்படலாம்

நாளை நடக்கும் இரு இடங்களுக்கான இடைத்தேர்தலில் காங்கிரஸ் கைப்பற்றாவிட்டாலும் கூட அதிருப்தி எம்எல்ஏக்களை எவ்வாறு தக்கவைக்கப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது குமாரசாமி பெரும்பான்மையைவிட ஒரு இடம் அதிகமாக 114 இடங்களுடன் ஆட்சியில் இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் மாநிலத்தில் மக்களவைத் தேர்தல் முடிவுகளில் இரு கட்சிகளும் கணிசமான அளவு இடங்கள் பெற்றால் கூட்டணி தொடர வாய்ப்பு இருக்கிறது. ஒருவேளை மோசமான தோல்வியை எதிர்நோக்கினால், இரு கட்சியினரும ஒருவரையொருவர் குறைசொல்லத் தொடங்குவார்கள். மாநிலத்தில் குமாரசாமி ஆட்சிக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தும்" எனத் தெரிவித்தார்.  

மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் கூறுகையில், ''மாநிலத்தில் ஜேடிஎஸ், காங்கிரஸ் கூட்டணிக்குள் எந்தக் குழப்பமும் இல்லை. குமாரசாமி 4 ஆண்டுகள் முதல்வராகத் தொடர்வார்'' என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள் உள்ள பல தலைவர்கள் குமாரசாமி மீது அதிருப்தியில்தான் இருக்கிறார்கள். அதேசமயம், மீண்டும் சித்தராமையா முதல்வராக வரக்கூடாது என்பதிலும் ஜேடிஎஸ் கட்சியினர் தீவிரமாக இருக்கிறார்கள்.

ஜேடிஎஸ் கட்சியின் மாநிலத் தலைவர் ஏ.ஹெச். விஸ்வநாத் கடந்த வாரம் அளித்த பேட்டியில், "ஜேடிஎஸ் கட்சி 37 இடங்களில் வென்றபோதிலும் குமாரசாமியை முதல்வராக காங்கிரஸ் ஒப்புக்கொண்டதால்தான் நாங்கள் கூட்டணி ஆட்சிக்கு சம்மதித்தோம். பாஜகவை அகற்றுவதில் இரு கட்சிக்கும் இடையே ஒருமித்த நோக்கம் இருந்தது. ஆனால், சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் கட்சி மாநிலத்தில் தோல்வி அடைந்துவிட்ட நிலையில் மீண்டும் அந்தக் கட்சி முதல்வர் பதவியை நினைக்கக்கூடாது" எனத் தெரிவித்தார்.

ஆதலால், மக்களவைத் தேர்தல் முடிவுகளும், இரு தொகுதிகளின் இடைத்தேர்தல் முடிவுகளும் கர்நாடக மாநிலத்தில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close