புதிய கல்விக்கொள்கையால் அறிவுசார் துறையில் அபரிமிதமான வளர்ச்சி: மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்


டெல்லி: புதிய கல்விக் கொள்கை காரணமாக இந்தியாவில் அபரிமிதமான வளர்ச்சி ஏற்பட்டிருப்பதாகவும், தரமான கல்வி வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று மத்திய பள்ளிக் கல்வித் துறை சார்பில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கல்வித்துறை அதிகாரிகள் உடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய கல்வி திட்டத்தின் கீழ் செயல்படும் என்சிஇஆர்டி, எஸ்சிஇஆர்டி, கேந்திரிய வித்யாலயா, நவோதயா வித்யாலயா, சிபிஎஸ்சி உள்ளிட்ட பாடப்பிரிவுகளின் உயரதிகாரிகள் பங்கேற்றனர். இதில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பங்கேற்று ஆய்வுக் கூட்டத்தை துவக்கி வைத்தார்.

பின்னர் கல்வித்துறை அதிகாரிகளிடையே பேசிய அவர், ”அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா முழுவதும் பள்ளிக்கல்வி முழுமையான வளர்ச்சியை எட்டும். பிரதமர் நரேந்திர மோடியின் கனவுத் திட்டமான ’விக்சித் பாரத்’ கல்வியில் மிக முக்கிய தூணாக அமைந்திருக்கிறது. கடந்த நான்கு ஆண்டுகளில் புதிய கல்விக் கொள்கை காரணமாக இந்தியாவில் கல்வியின் சூழல் மிகப்பெரிய வளர்ச்சியை ஏட்டியுள்ளது. புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டதால் இந்தியா அறிவு சார்ந்த துறையில் சூப்பர் பவராக உருவாகியுள்ளதோடு தரமான கல்வியை சமமானதாகவும், அனைவருக்கும் ஆனதாகவும் வழங்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது.” என்றார்.

மேலும், ”இந்தியாவில் தாய்மொழி வழிக் கல்விக்கு புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிக்கிறது. புதிய கல்விக் கொள்கையின் மிகப்பெரிய உந்துதலாக இந்த அடிப்படை இருந்து வருகிறது. அனைவருக்கும் கல்வி, சமமான கல்வி, தரமான கல்வி, கட்டுப்படியான கல்வி மற்றும் நம்பகமான கல்வியை புதிய கல்விக் கொள்கை உறுதிப்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசுகள் ஒன்றாக இணைந்து இந்த கல்விச் சூழலை மேலும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.“ என்று அவர் கூறினார்