[X] Close

'மனநிறைவான தருணம்': பக்கவாதம் பாதித்த சிறுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட சிஆர்பிஎப் வீரருக்கு குவியும் பாராட்டு


  • kamadenu
  • Posted: 15 May, 2019 16:21 pm
  • அ+ அ-

-ஐ.ஏ.என்.எஸ்

புல்வாமா தாக்குதலில் நான் தப்பித்ததுகூட எனக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை, ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு பசியோடு இருந்த சிறுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்ட தருணம்தான் எனக்கு மனநிறைவான தருணம் என்று தொடங்கினார் சிஆர்பிஎப் தலைமை காவலர் இக்பால் சிங்.

குண்டுகளும், துப்பாக்கிச் சத்தத்துக்கும் இடையே வாழும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில்தான் இந்த மனிதநேய சம்பவம் மலர்ந்திருக்கிறது.

மத்திய ரிசர்வ் படை போலீஸில் தலைமைக் காவலராக இருப்பவர் 44 வயதான இக்பால் சிங். 49 பட்டாலியன் பிரிவில் பணியாற்றும் இக்பால் சிங்கிற்கு, திங்கள்கிழமை ஸ்ரீநகரில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. அப்போது மதிய நேரதத்தில் உணவு சாப்பிடும் நேரம் வந்ததும் இக்பால் சிங் சாப்பிடச் சென்றார்.

அப்போது, ஸ்ரீநகர் கடைவீதியில் ஒரு கடையின் முன் 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் அமர்ந்திருந்தான். அந்த சிறுவன் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு, உணவை கையால் எடுத்து சாப்பிடமுடியாமல் இருந்ததைப் பார்த்த இக்பால் சிங் அந்த உணவை எடுத்து சிறுவனுக்கு பசியாறும் வரை ஊட்டிவிட்டார். அதன்பின் ஒரு தந்தை செய்வதைப் போல் தனது கையால் வாயைத் துடைத்துவிட்டு, தண்ணீரை குடிக்கக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

இந்த காட்சியை இக்பால் சிங்கிற்கே தெரியாமல் யாரோ வீடியோ எடுத்து, அதை அடுத்த சிலமணிநேரங்களில் யூடியூப்பில் பதிவேற்றம் செய்தனர். ஆனால், பதிவேற்றம் செய்த சிலமணிநேரத்தில், லட்சக்கணக்கில் லைக்கள் வந்து பகிரப்பட்டது. சிஆர்பிஎப் வீரர் இக்பால் சிங்கின் மனிதநேயம் அனைவராயும் பாராட்டப்பட்டு வருகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்தில் இருந்து உயிர்தப்பியவர் இந்த இக்பால் சிங். வெடித்துச்சிதறிய சிஆர்பிஎவ் வீரர்கள் சென்ற பேருந்து, 4 பேருந்துக்கு முன்னால்தான் இக்பால்சிங் சென்ற  பேருந்தும் சென்றது. தாக்குதலுக்குப்பின் இக்பால்சிங் ஏராளமான வீரர்களை காப்பாற்றியுள்ளார்.

Master.png 

இதுகுறித்து இக்பால் சிங்கிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறுகையில், " எனக்கு திங்கள்கிழமை ஸ்ரீநகர் நவகடல் பகுதியில் பணி ஒதுக்கப்பட்டு இருந்தது. மதியம் 12.30 மணிவந்ததும் சாப்பிடச் சென்றேன். அப்போது, ஒரு கடையின் முன் ஒருமேஜையில் 10வயதுள்ள ஒரு சிறுவன் சாப்பாட்டை வைத்திருந்து என்னை அழைத்தான்.

நான் அருகில் சென்றவுடன், தன்னுடைய சாப்பாட்டை காட்டி தனக்கு ஊட்டிவிடுமாறும், தன்னால் கையை அசைக்க முடியாது என்று தெரிவித்தான்.  இதைக் கேட்டவுடன் என் மனது நெகிழ்ந்துவிட்டது. உடனடியாக அந்த சாப்பாட்டை எடுத்து சிறுவனுக்கு ஊட்டிவிட்டேன்.

சிறுவனின் கைகள் பக்கவாதத்தால் செயல் இழந்திருப்பதை அறிந்தேன். அதனால்தான் சுயமாக சாப்பிடமுடியவில்லை என்பதையும் புரிந்துகொண்டேன். அந்த சிறுவனுக்கு சாப்பாடு ஊட்டிவிட்டு விட்டுமுடித்தபின், குடிக்க தண்ணீர் கொடுத்து, வாயை துடைத்துவிட்டு சென்றேன் " என்று தெரிவித்தார்.

அந்த சிறுவனின் பெயர், முகவரியில் கொண்டுபோய் சேர்க்கவில்லையா எனக் கேட்டபோது, " எனக்கு அந்த சிறுவன் யாரென்று தெரியாது சார். நான் சாப்பாடுகொடுத்து முடித்ததும் என்னைப் பார்த்து சிரித்துவிட்டு அந்த சிறுவன் சென்றுவிட்டான். அவனுக்கு சரியாகக் கூட பேசத் தெரியவில்லை. பின் எவ்வாறு முகவரியைக் கேட்கமுடியும்.

சிஆர்பிஎப் வீரர்களாகிய எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்தல் முக்கிய பயிற்சியாக அளிக்கப்படுகிறது. பயிற்சியின் போது மனிதநேயம் அதிகமாக வலியுறுத்தப்படுகிறது. என்னை யாராவது வீடியோ எடுப்பார்கள் என்று சிறிதுகூட நினைக்கவில்லை.

புல்வாமா தாக்குதலின்போது, நான் சென்ற பேருந்து, தாக்குதல் நடந்த பேருக்கு 4 வாகனங்களுக்கு முன்னால் சென்றது. அதனால் தப்பித்தோம். அப்போது கிடைத்த மனநிம்மதியைக் காட்டிலும், இந்த சிறுவனுக்கு உணவு ஊட்டியபோதுதான் எனக்கு மனநிறைவு கிடைத்துள்ளது " எனத் தெரிவித்தார்.

சிஆர்பிஎப் தனது ட்விட்டர் பக்கத்தில் இக்பால் சிங்கை புகழ்ந்து " அனைத்து மதங்களின் தாய் மனிதநேயம்தான்" என்று தெரிவித்துள்ளது. மேலும், சிஆர்பிஎப் சார்பில் மனிதநேயத்துக்காக வழங்கப்படும் உயரிய விருதையும் வழங்க உள்ளது.

ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறுகையில், " காஷ்மீரில் உள்ள ஆயுதப்படையினர் அனைவரும் ஒரேமாதிரி இருக்கமாட்டார்கள், அனைவரையும் பொதுமைப்படுத்தவும் முடியாது. இதுபோன்ற மனிதநேயம் மிக்க வீரருக்கு என்னுடைய வணக்கத்தை தெரிவிக்கிறேன்" எனப் பாராட்டியுள்ளார்.

 

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close