மாணவிகளை நிர்வாணப்படம் எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை: அரசு பள்ளியில் பயங்கரம்!


ஓவியம் மற்றும் விளையாட்டு கற்பிப்பதாகக் கூறி நூற்றுக்கணக்கான அரசு பள்ளி மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தி நிர்வாணப் புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டம், பாண்டவபுரா தாலுகாவில் மேலுகோட் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் படித்த யோகி என்ற பழைய மாணவர், மாணவ, மாணவிகளுக்கு ஓவியம் மற்றும் விளையாட்டுக் கற்றுத் தரும் பணியில் ஈடுபட்டிருந்தார். அவர் நூற்றுக்கணக்கான மாணவிகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்தது.

ஓவியம் மற்றும் விளையாட்டு பயிற்சிக்கு வந்த மாணவிகளை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து அதைக்காட்டி அவர்களுக்கு யோகி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அத்துடன் இந்த புகைப்படங்களை உங்கள் பெற்றோருக்கு அனுப்பி வைத்து விடுவேன் என்று மிரட்டியும் பாலியல் தொல்லையில் ஈடுபட்டுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நான்கு மாணவிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிக்கு கடிதம் எழுதினர். இதனையடுத்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் பள்ளியில் வந்து விசாரணை நடத்திய போது இந்த கொடூரச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

இதன்பேரில், மேலுகோட் போலீஸார், யோகி மீது ஐபிசி பிரிவு 354 ஏ, 354 டி, 509-ன் கீழ் போக்சோ உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று கைது செய்தனர். இந்த சம்பவம் மாண்டியா மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.