[X] Close

நான் முழுவதுமாக எரிந்துவிட்டேன்; இனி யாரும் பலாத்காரம் செய்ய முடியாது: உ.பி.யில் கவலைக்கிடமான நிலையில் இளம் பெண் உருக்கம்


  • kamadenu
  • Posted: 15 May, 2019 07:17 am
  • அ+ அ-

உத்தரபிரதேச மாநிலத்தில் தந்தையால்10 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு பலரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதால் தீக்குளித் து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்றுவருகிறார். “இனி என்னை அவர்கள் பலாத்காரம் செய்ய முடியாது. நான் முழுவதுமாக எரிந்துவிட்டேன்’’ என்று அந்தப் பெண் வேதனையால் துடித்தபடி உருக்கமாக பேட்டி அளித்தார்.

உத்தரபிரதேச மாநிலம் மீரட் அருகே ஹபூரைச் சேர்ந்த 24 வயதான இளம்பெண் சுனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவரை கடந்த 2009-ம் ஆண்டு 14 வயதாகும்போது அவரது தந்தை, வயதான ஒருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். சில மாதங்கள் கழித்து சுனிதாவை அவரது கணவர் கைவிட்டுச் சென்றுவிட்டார். தந்தையின் வீட்டுக்கு வந்த சுனிதாவை அவரது தந்தை ரூ.10 ஆயிரத்துக்கு ஒருவருக்கு விற்பனை செய்துள்ளார். சுனிதாவை வாங்கிய நபர் அவரை திருமணம் செய்து கொண்டு கொடுமைப்படுத்தி உள்ளார். அவர் தனது நண்பர்களின் வீடுகளுக்கு சுனிதாவை வீட்டு வேலைகளுக்கு அனுப்பினார், அந்த நண்பர்கள் சுனிதாவை கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். கணவரும் நண்பர்களும் சுனிதாவை அடித்து, உதைத்தும் மிரட்டியுள்ளனர்.

கொடுமை தாங்காமல் போலீஸ் நிலையம் சென்ற சுனிதாவின் புகாரை வாங்க போலீஸார் மறுத்ததுடன் அவரை விரட்டியுள்ளனர். மனம் உடைந்த சுனிதா, கடந்த மாதம் 28-ம் தேதி தேதி உ.பி.யில் தனது நண்பரின் வீட்டில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்தார். அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்ந்தனர். பின்னர், டெல்லி கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 80 சதவீத தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தீக்காயம் காரணமாக முகம் தவிர உடல் முழுவதும் தோல் உரிந்து மரண வேதனையை அனுபவித்து வரும் சுனிதா கூறுகையில், ‘‘நான் இறக்க விரும்புகிறேன். என்னைப்போன்று யாரும் சித்ரவதை அனுபவிக்கக் கூடாது. முதல் கணவர் சில மாதங்களில் என்னைக் கைவிட்டார். பின்னர். இரண்டாவது கணவருக்கு ரூ.10 ஆயிரத்துக்கு என் தந்தை என்னை விற்றுவிட்டார். அவர் தினமும் என்னை அடித்து உதைப்பார். அவரது நண்பர்கள் என்னை பலாத்காரம் செய்தனர். 20 பேருக்கும்மேல் என்னை பலாத்காரம் செய்தனர். என் மீது ஆசிட் வீசிவிடுவேன் என்றும் மிரட்டினர். போலீஸில் புகார் அளித்தும் பலனில்லாததால் இந்த முடிவை எடுத்தேன். இனிமேல் என்னை அவர்கள் பலாத்காரம் செய்யமுடியாது. நான் முழுவதுமாக எரிந்துவிட்டேன்’’ என்று உடலும் மனமும் வேதனையில் துடிக்க அழுதபடியே சுனிதா தெரிவித்தார். அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

துயரமான நேரங்களில் தனக்கு ஆதரவாக இருந்ததாகவும் தனது ஒரே நம்பிக்கை இவர்தான் என்றும் அருகில் இருந்த நண்பரான ரிஷப் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரை சுனிதா சுட்டிக்காட்டினார். சுனிதாவின் உறவினர்கள் கைவிட்ட நிலையில் தான் மட்டுமே அருகில் இருந்து பார்த்துக் கொள்வதாக ரிஷப் தெரிவித்தார். சுனிதாவின் துயரங்களுக்கெல்லாம் அவரது தந்தையே காரணம் என்று குற்றம்சாட்டிய ரிஷப், சுனிதா குணமாகி முறைப்படி விவகாரத்து பெற்றபின் அவரை திருமணம் செய்ய காத்திருப்பதாகவும் கூறினார். ஆனால், போலீஸாரின் முதல் தகவல் அறிக்கையில் ரிஷப்புக்கும் சுனிதாவுக்கும் ஏற்கெனவே திருமணமாகி கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி முறைப்படி பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உ.பி.யின் மொராதாபாத்தில் வாடகை வீடு ஒன்றில் சுனிதா தீக்குளித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close