[X] Close

பிரமதர் மோடி குறித்த கருத்தால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய மணி சங்கர் அய்யர்: பாஜக கடும் கண்டனம்


  • kamadenu
  • Posted: 14 May, 2019 15:38 pm
  • அ+ அ-

-பி.டி.ஐ

பிரதமர் மோடி இழிவான மனிதர்(நீச் ஆத்மி) என்று தான் கூறியது சரிதான் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கருத்து தெரிவித்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தரக்குறைவான வார்த்தைகளைப் பேசும் மனிதர் மோடி என்றும் மணிசங்கர் அய்யர் நாளேடு ஒன்றில் எழுதியுள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 7-ம் தேதி காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் அளித்த பேட்டி ஒன்றில், பிரதமர் மோடி இழிவான மனிதர் என்று தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மணிசங்கர் அய்யரை கடுமையாகக் கண்டித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்தார். சில மாதங்களுக்குபின் மீண்டும் மணிசங்கர் அய்யர் சேர்க்கப்பட்டார்.  இதனால், இந்த விவகாரம் சில மாதங்களாக சூடு அடங்கி இருந்தது.

இந்நிலையில், தி ரைஸிங் காஷ்மீர், தி பிரின்ட் ஆகிய இணையதளங்களில் மணிசங்கர் அய்யர் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதில் தான் முன்பு கூறிய மோடி இழிவான மனிதர் எனும் கருத்தை நியாயப்படுத்தி எழுதி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அந்த கட்டுரையில் மணிசங்கர் அய்யர் கூறியிருப்பதாவது:

மக்களுக்கு ஜவஹர்லால் நேருவைப் ஏன் பிடிக்கிறது, மோடியை ஏன் வெறுக்கிறார்கள் எனக் கண்டுபிடித்துவிட்டேன். ஏனென்றால் கேம்பிரிட்ஜ் பல்கலையில் இயற்கை அறிவியல் பாடப்பிரிவில் நேரு பட்டம் பெற்றவர். மக்களை மூடநம்பிக்கைகளில் இருந்து வெளிக்கொண்டுவந்து, அறிவியல் பூர்வமான மாற்றத்துக்கு வழிகாட்டியவர்.

ஆனால், இந்துத்துவா ஆதரவாளர்கள் புராணக்கதைகள் மீது அதிகமான நம்பிக்கை கொண்டவர்கள். எப்-16 ரக விமானத்தை இந்துக்கள் முன்பே கண்டறிந்தார்கள் என்று பேசுகிறார்கள், பிளாஸ்டிக் சர்ஜரி செய்து விநாயகருக்கு யானை தலை வைத்தார்கள் என்றெல்லாம் பேசுகிறார்கள். இவர்கள் டெல்லி, குஜராத் பல்கலையில் இருந்து எந்த பட்டமும் பெறவில்லை, தோக்லா உணவில் அறிவியல் பூர்வமாக என்ன கலவை சேர்க்கப்பட்டிருக்கிறது கூட தெரியாது.

பாலகோட் தாக்குதல் குறித்து நமது பிரதமர் மோடியின் பேச்சு வீரம் மிகுந்த ராணுவத்தினரை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. விமானப்படையைச் சேர்ந்தவர்களுக்கு ராடாருக்கும், தொலைநோக்கிக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார்களா. எந்தமாதிரியான காலநிலை இருந்தாலும், விமானத்தின் வருகையை துல்லியமாக ராடார் கண்டுபிடித்துவிடும்.

பிரதமர் மோடியை எப்படியும் மே 23ம் தேதியோடு மக்கள் வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள். இந்த தேசம் பார்த்த மிகமோசமான தரம்தாழ்ந்த வார்த்தைகளை பேசும் பிரதமரின் காலம் முடிவுகக்கு வருகிறது.

நான் கடந்த 2017, டிசம்பர் 7-ம் தேதி என்ன கூறினேன் என்று நினைவிருக்கிறதா. நான் தீர்க்கதரிசியாக இருந்தேன்தானே. என்று தெரிவித்திருந்தார்.

பாஜக கண்டனம்

மணிசங்கர் அய்யரின் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. பாஜக செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்ம ராவ் ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், " தெளிவாக தெரியாத இந்தியில் பேசி மன்னிப்பு கேட்டு அதன்பின்னால் மணிசங்கர் அய்யர் ஒளிந்துகொண்டார். இப்போது, நான் தீர்க்கத்தரிசி என்கிறார் மணிசங்கர் அய்யர். காங்கிரஸ் கட்சி மணிசங்கர் அய்யரை சஸ்பெண்ட் செய்து சிறிது காலத்தில் நீக்கிவிட்டது. இரட்டை வேடத்துடன் பேசும், அகங்காரத்துடன் பேசும் காங்கிரஸ் முகம் வெளியே வந்துவிட்டது.

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசும் மணிசங்கர் அய்யர், பிரமதர் தேசவிரோதி என்கிறார்., தேசபக்தியின் மறுவடிவம் பிரதமர் மோடி என்று தேசத்துக்கு தெரியும். மணிசங்கர் அய்யர் காங்கிரஸ் வாரிசு குடும்பத்தின் அடிமை என்பது தெரியும். அவதூறு பேசுபவர்கள் அனைவரும் வாரிசுகுடும்பத்தின் நெருக்கமானவர்கள் என்பதில் வியப்பு ஏதும் இல்லை " எனத் தெரிவித்துள்ளார்.

 

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close