கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 197 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளதால் டெங்குவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரை டெங்குவால் மாநிலம் முழுவதும் 7,362 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 892 பேருக்கு டெங்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 197 பேருக்கு டெங்கு இருப்பது கண்டறியப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் டெங்குவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.
பெங்களூரு மாநகர் பகுதிகளில் டெங்குவால் 95 பேர், புறநகர் பகுதிகளில் 4 பேர், ஷிமோகாவில் 16 பேர், விஜயபுரா. பாகல்கோட், உத்தர கன்னடா ஆகிய மாவட்டங்களில் தலா 3 பேர், கலபுர்கியில் 15 பேர், கொப்பலாவில் 1, சாமராஜநகரில் 6 பேர், மாண்டியாவில் 33 பேர், உடுப்பியில் ஒருவர், சிக்கமகளூருவில் 17பேர் என ஒரே நாளில் 197 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தை ஒருவரும், ஒன்று முதல் 18 வயதிற்குபட்ட 63 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, சுகாதாரத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். லார்வா கணக்கெடுப்பு, கொசு ஒழிப்பு, வீடு வீடாக சுகாதார விழிப்புணர்வு பணி நடந்து வருகிறது. இந்நிலையில், நகர்ப்புற வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் சித்தராமையா, அசுத்தமான தண்ணீரை மக்களுக்கு வழங்காமல் கவனமாக இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும்," மாசுபட்ட தண்ணீரால் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட அலுவலர் நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும். துருப்பிடித்த பழைய குழாய்களை மாற்ற வேண்டும். ஒவ்வொரு 15 நாட்களுக்கும் நீர் ஆதாரம் மற்றும் விநியோக இடத்தில் உள்ள நீரின் தரத்தை ஆய்வகத்தில் கட்டாயமாக சோதிக்க வேண்டும். தண்ணீரின் தர சோதனை தோல்வியடையும் இடங்களில் புதிய ஆதாரங்களில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும்" என்றார்.