ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் மீண்டும் தாக்குதல் : 5 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!


ஜம்மு காஷ்மீரின் கத்துவா பகுதியில் நேற்று மாலை இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ரோந்து வாகனம் ஒன்றில் 10 ராணுவ வீரர்கள் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவர்களை மறைந்திருந்து கையெறி குண்டு மற்றும் துப்பாக்கிகளால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

உடனடியாக பாதுகாப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்திற்கு போலீஸாரும், பாதுகாப்புப் படையினரும் விரைந்தனர். அவர்கள் நடத்திய பதில் தாக்குதலை அடுத்து, பயங்கரவாதிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனிடையே உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் உடல்களும் பத்தான்கோட் ராணுவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு காயமடைந்த 5 ராணுவ வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே ராணுவ வீரர்களின் உயிரிழப்பிற்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார். தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பயங்கரவாதிகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை தொடர்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இதனிடையே தாக்குதலைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் மச்சேடி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தினர் தீவிர சோதனை மற்றும் பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் ஹெலிகாப்டர் மூலமாகவும் ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு காஷ்மீர் டைகர்ஸ் என்ற தடை செய்யப்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்று இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.