[X] Close

7 மாநிலங்களில் 6-வது கட்ட தேர்தல்: 59 மக்களவை தொகுதிகளில் 63.3 சதவீத வாக்குப்பதிவு: பெரும்பாலான இடங்களில் அமைதியாக நடந்து முடிந்தது


7-6-59-63-3

  • kamadenu
  • Posted: 13 May, 2019 07:12 am
  • அ+ அ-

-பி.டி.ஐ

மக்களவைக்கு 6-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்ற 59 தொகுதிகளில் சராசரியாக 63.3 சதவீத அளவுக்கு வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஏப்ரல் 11-ம் தேதி முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. 5 கட்ட மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில் 6-ம் கட்டமாக 59 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில், பிஹார் (8 தொகுதிகள்), ஹரியாணா (10), ஜார்க்கண்ட் (4), மத்திய பிரதேசம் (8), உத்தரபிரதேசம் (14), மேற்குவங்கம் (8), டெல்லி (7) ஆகிய 7 மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றது. தேர்தலையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. டெல்லியில் 60 ஆயிரம் போலீஸாரும், மேற்குவங்கத்தில் 70 ஆயிரம் போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

59 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 10.17 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தேர்தலுக்காக இந்தத் தொகுதிகளில் 1.13 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. மொத்தம் 979 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.

வாக்குப்பதிவு முடிந்ததும் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், விவிபாட் இயந்திரங்களும் சீல் வைக்கப்பட்டன. பின்னர் இவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டு செல்லப்பட்டன. மாலை 6 மணி நிலவரப்படி சராசரியாக 63.3 சதவீத வாக்குகள் பதிவாயின என்று தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஒரு சில சம்பவங்களைத் தவிர பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றது.

மேற்குவங்கத்தில் மோதல்

மேற்குவங்கத்தில் பாங்குராவில் அமைக்கப்பட்ட 254-ஆவது வாக்குச் சாவடி மையத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் மோசடியில் ஈடுபட்டதாக பாஜக நிர்வாகிகள் குற்றம்சாட்டினர். இதையடுத்து இரு கட்சிகளுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீஸார் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.

மேற்குவங்கத்தில் நடைபெற்ற மற்றொரு சம்பவத்தில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான பாஜகவின் பெண் வேட்பாளர் பாரதி கோஷ் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து அவர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். ஒரு சில இடங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, அந்த இயந்திரங்கள் சரி செய்யப்பட்டு வாக்குப்பதிவு நடைபெற்றது. 59 தொகுதிகளிலும் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 46.52 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் தங்களது வாக்குகளைச் செலுத்தினர்.

வாக்களித்த பின்னர் ராகுல் காந்தி கூறும்போது, ‘‘பணமதிப்பு நீக்கம், விவசாயிகள் பிரச்சினை, ஜிஎஸ்டி மற்றும் ரஃபேல் ஊழல் போன்ற முக்கிய பிரச்சினைகளை எதிர்த்து போராடுவதாக இந்தத் தேர்தல் அமைந்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தன் பிரச்சாரத்தில் வெறுப்பை பயன்படுத்தினார்; நாங்கள் அன்பை பயன்படுத்தினோம்; அன்பே வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்றார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி டெல்லி கே. காமராஜ் சாலையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், முன்னாள் முதல்வரும், டெல்லி வடகிழக்கு தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான ஷீலா தீட்சித், ஏர்டெல் நிர்வாக இயக்குநர் சுனில் பார்தி மித்தல், மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்த்தன் உள்ளிட்டோரும் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடிகளில் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close