அம்பானி மகன் திருமணம்: மும்பையில் ஹோட்டல்கள் நிரம்பியதால் எகிறிய கட்டணங்கள்!


மும்பை: முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்களால் மும்பையில் உள்ள ஹோட்டல்களின் புக்கிங் மற்றும் கட்டணம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் மும்பை, பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள ஜியோ உலக மாநாட்டு மையத்தில் வரும் 12ம் தேதி அம்பானி வாரிசு திருமணம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களாக மும்பையில் திருமணத்துக்கு முந்தைய கொண்டாட்டங்கள் பிரம்மாண்டமாக நடைபெற்றது வருகிறது.

இதில் பாலிவுட் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பங்கேற்றனர். இது குறித்த செய்திகள், வீடியோக்கள் சமூக வலைதளங்களை பெரிதும் ஆக்கிரமித்து வருகின்றன. முகேஷ் அம்பானி மகன் திருமணத்தை முன்னிட்டு ஜூலை 12 முதல் 14ம் தேதி வரை பல்வேறு கொண்டாட்டங்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. உலக அளவில் பல்வேறு பிரபலங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் முக்கிய விருந்தினர்கள் வர உள்ளனர்.

இந்நிலையில் மும்பையில் அனைத்து 5 நட்சத்திர ஹோட்டல்கள் நிரம்பி, அறை வாடகை கட்டணங்கள் பெரிதும் உயர்ந்துள்ளன. ஆனந்த் அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் நடைபெறவிருக்கும் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) உள்ள இரண்டு முக்கிய ஹோட்டல் அறைகள் அனைத்தும் புக்கிங் செய்யப்பட்டு விட்டதாக பயண மற்றும் ஹோட்டல் இணையதளங்களில் காட்டுகின்றன.

இங்குள்ள ஒரு ஹோட்டலில் ஜூலை 14 அன்றைக்கு ஓர் அறைக்கு, ஓர் இரவுக்கு ரூ.91,350-ஐ கட்டணமாக காட்டுகிறது. இங்கு வழக்கமாக ஓர் இரவு தங்குவதற்கு அறை வாடகை ரூ.13 ஆயிரம் ஆகும். விருந்தினர்கள் எங்கு தங்குவார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் பிகேசி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹோட்டல் கட்டணங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன.