பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை: மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு


புதுடெல்லி: மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிறருடன் கலந்தாலோசித்த பிறகு, பெண் ஊழியர்களுக்கான மாதவிடாய் விடுமுறைகள் குறித்த மாதிரிக் கொள்கையை உருவாக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறையை கட்டாயப்படுத்துவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஷைலேந்திர திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது கொள்கை சார்ந்த விஷயம். நீதிமன்றங்கள் ஆராய வேண்டிய பிரச்சினை அல்ல என தெரிவித்தனர். மேலும், “மாதவிடாய் விடுப்புகளை வழங்குவது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தக்கூடும். இது நிறுவனங்கள் பெண்களை பணிக்கு தேர்ந்தெடுக்காமல், தீங்கான விளைவை ஏற்படுத்தக்கூடும்” என்றனர்.

மேலும், விடுமுறை எவ்வாறு அதிக பெண் பணியாளர்கள் வேலையில் இருப்பதை ஊக்குவிக்கும் என மனுதாரரிடம் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், "அத்தகைய விடுப்பை கட்டாயப்படுத்துவது பெண்கள் பணியிலிருந்து விலக்கப்படுவதற்கு வழிவகுக்கும். நாங்கள் அதை விரும்பவில்லை. மாநிலங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிறருடன் கலந்தாலோசித்த பிறகு, பெண் ஊழியர்களுக்கான மாதவிடாய் விடுமுறைகள் குறித்த மாதிரிக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்” என்றனர்.

அதைத் தொடர்ந்து, இது தொடர்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் செயலாளர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்தியை அணுகுமாறு மனுதாரரின் வழக்கறிஞர் ராகேஷ் கண்ணாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.