[X] Close

ஐஎன்எஸ் விராட் கப்பலை ராஜீவ் குடும்பத்தினர் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினர்: கடற்படை முன்னாள் தளபதிகள் தகவல்


  • kamadenu
  • Posted: 11 May, 2019 11:02 am
  • அ+ அ-

ஐஎன்எஸ் விராட் கடற்படை கப்பலை ராஜீவ் காந்தி தனது சொந்த டாக்ஸி போல குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க பயன்படுத்தியதாக முன்னாள் கடற்படை தளபதிகள் இரண்டுபேர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராணுவத்தை தனது சொந்த படை போல பிரதமர் நரேந்திர மோடி பேசுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது ஐஎன்எஸ் விராட் கடற்படை கப்பலை விடுமுறையைக் கழிக்க சுற்றுலாவுக்காக பயன்படுத்தினார். அந்தக் கப்பலில் சோனியாவின் குடும்பத்தைச் சேர்ந்த வெளிநாட்டவர்களும் அழைத்துச் செல்லப்பட்டனர். ஐஎன்எஸ் விராட் கப்பலை தனது சொந்த டாக்ஸி போல ராஜீவ் காந்தி பயன்படுத்தினார்’’ என்றார். இதற்கு காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. பிரதமர் மோடி பொய் சொல்வதாக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறினார்.

மேலும், ராஜீவ் காந்தி அலுவல் ரீதியாக அதிகாரபூர்வமாகத்தான் ஐஎன்எஸ் விராட் கப்பலில் சென்றார் என்றும் சொந்த உபயோகத்துக்காக செல்லவில்லை என்றும் முன்னாள் கடற்படை தளபதிகள் வினோத் பஸ்ரிச்சா, ராமதாஸ் ஆகியோர் தெரிவித்தனர். இந்நிலையில், பிரதமர் மோடி கூறிய கருத்துக்கு ஆதரவாக முன்னாள் கடற்படை தளபதிகள் வி.கே.ஜெட்லி, ஹரீந்தர் சிக்கா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

முன்னாள் தளபதி வி.கே.ஜெட்லி தனது ட்விட்டர் பதிவில், ‘‘பிரதமராக ராஜீவ் காந்தி இருந்தபோது அவரது குடும்பத்தினர் ஐஎன்எஸ் விராட் கப்பலை தங்கள் விருப்பம்போல பயன்படுத்திக் கொண்டனர். அதற்கு அந்தக் கப்பலில் பணியாற்றிய நானே சாட்சியாக இருக்கிறேன். கடற்படை தளபதி அறையில் ராஜீவ் குடும்பத்துக்காக ஒரு பகுதி ஒதுக்கப்பட்டது. துணைத் தளபதியாக இருந்த பஸ்ரிச்சா எங்கள் மேலதிகாரியாக இருந்தார். கப்பலில் வெளிநாட்டினரும் இருந்தனர். இது பஸ்ரிச்சாவுக்கும் தெரியும். லட்சத்தீவுக்குச் சென்று விடுமுறையைக் கழிக்க ஐஎன்எஸ் விராட் கப்பலை ராஜீவ் குடும்பத்தினர் பயன்படுத்திக் கொண்டதை மறுக்க முடியாது’’ என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு முன்னாள் தளபதியான ஹரீந்தர் சிக்கா தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

ராஜீவ் காந்தி குடும்பத்தினர் ஐஎன்எஸ் விராட் கப்பலை சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தினர். இதை கடற்படை அதிகாரிகள் விரும்பவில்லை. எனினும், எதிர்ப்பு தெரிவித்தால் எங்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று பயத்தால் பேசாமல் இருந்தோம். ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா காந்தி அப்போது இத்தாலிக் குடியுரிமை வைத்திருந்தார். வெளிநாட்டு குடியுரிமை வைத்துள்ள ஒருவரை போர்க்கப்பலில் அனுமதிப்பது தவறானது. இதுபற்றி எனது மேலதிகாரியிடம் தெரிவித்தேன். வாயை மூடிக்கொண்டு பேசாமல் இருக்குமாறு அவர் என்னிடம் கூறினார். அப்போது எங்களால் எதிர்க்க முடியவில்லை. நாட்டின் நலனை கருத்தில் கொண்டு இப்போது உண்மையை சொல்கிறோம்.

இவ்வாறு ஹரீந்தர் கூறினார்.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close