[X] Close

திருச்சூர் பூரம் விழாவுக்கு திடீர் சிக்கல்: யானைக்கு தடை விதித்ததால் உரிமையாளர்கள் எதிர்ப்பு


  • kamadenu
  • Posted: 10 May, 2019 14:48 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் விழாவுக்கு அரசின் தடையை எதிர்த்து யானைகளை அழைத்து வர முடியாது என்று அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளதால் விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  

கேரளாவில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா மே-13ம் தேதி மற்றும் மே 14-ம் தேதிகளில் நடைபெறுகிறது. இதில் திருச்சூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான கேரள மக்கள் பங்கேற்பது வழக்கம்.

இங்குள்ள வடக்குன்னாதர் கோயில் முன்புள்ள மைதானத்தில் கண்கவர் யானைகள் அணிவகுப்பு நடைபெறும். தமிழகத்தின் ஜல்லிகட்டு போட்டியை போல, திருச்சூர் பூரம் அம்மாநிலத்தின் கலாச்சார அடையாள விழாவாக கருதப்படுகிறது.  

திருச்சூர் பூரம் விழாவில் ஆண்டுதோறும், பத்தரை அடி உயரமுடைய 54 வயதான ராமச்சந்திரன் என்ற யானை அணிவகுப்பில் நடுவில் அழைத்து வரப்படும். பல ஆண்டுகளாக பாரம்பரிய வழக்கப்படி அந்த ராமன் யானைதான் மற்ற யானைகளை. அணி வகுப்பில் வழி நடத்திச் செல்லும். இந்த யானையின் கம்பீரத்தை கண்டுகளிக்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கூடுவர்.

இந்த ஆண்டு பூரம் விழாவில் ராமச்சந்திரன் யானையை அழைத்து வர திருச்சூர் மாவட்ட ஆட்சியர் தடை விதித்துள்ளார். அந்த யானை கடந்த பிப்ரவரி மாதத்தில் இரண்டு பேரை மிதித்துக் கொன்றுவிட்டது. திருவிழாவில் இரைச்சல் மற்றும் பட்டாசு வெடிக்கும் ஓசையைக் கேட்டு யானை மிரளக்கூடும் என்பதால் அந்த யானைக்கு அரசு தடை விதித்துள்ளது.

06tvtrKudamattam 1.jpg 

இதுமட்டுமின்றி விலங்கின ஆர்வலர்களும் ராமச்சந்திரன் யானையை பூரம் விழாவுக்கு அழைத்து வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து கேரள அரசு மற்றும் விலங்கின ஆர்வலர்களின் தடை உத்தரவை கண்டித்து பூரம் விழாவில் எந்த யானைகளும் பங்கேற்பதில்லை என கேரள யானைகள் வளர்ப்போர் முடிவெடுத்துள்ளனர்.

இதனால் பூரம் விழாவில் யானைகள் இல்லாத நிலை ஏற்படும் சூழல் உருவாகியுளளது. பிரச்னையை சுமூகமாக தீர்க்க, யானை உரிமையாளர்கள் உடன் கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

சில நிபந்தனைகளுடன் 45 நிமிடங்கள் மட்டும் அலங்கரிக்கப்பட்ட ராமச்சந்திரன் யானையை பேரணியில் அழைத்துச் செல்ல ஒப்புதல் அளிக்க தயார் என அரசு தரப்பில் தெரிவிககப்பட்டது. கேரள அரசின் உத்தரவை எதிர்த்து யானை வளர்ப்போர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு கேரள உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட விரும்பவில்லை என்றும், திருச்சூர் மாவட்ட ஆட்சியரே முடிவெடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தனர். இதனால் பூரம் விழாவில் யானைகள் பங்கேற்கும் விஷயத்தில் இறுதி முடிவு எட்டப்படாத நிலை நீடித்து வருகிறது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close