[X] Close

தலைநகர் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளை கைப்பற்றப் போவது யார்?- ஆம் ஆத்மிக்கு பாஜக, காங்கிரஸ் சவால்


7

  • kamadenu
  • Posted: 09 May, 2019 09:07 am
  • அ+ அ-

தலைநகர் டெல்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிக்கு மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதில் ஆத் ஆத்மி கட்சிக்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கடும் போட்டியாக உள்ளன.

டெல்லியில் மொத்தம் 7 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இவற்றுக்கு வரும் 12-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மோடி அலையால் மொத்த இடங்களிலும் பாஜக வெற்றி பெற்றது. எனினும், 2015-ம் ஆண்டு நடந்த டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.

அன்னா ஹசாரே தலைமையில் ஊழலுக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இருந்து உதித்ததுதான் ஆம் ஆத்மி கட்சி. அதனால் ஷீலா தீட்சித் தலைமையிலான 15 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியை மக்கள் செல்வாக்குடன் 2015-ல் ஆம் ஆத்மி பறித்தது. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் நிலைமை முற்றிலும் மாறியுள்ளது. ஆம் ஆத்மிக்கு எதிராக கடும் அதிருப்தி நிலவுகிறது. அதனால் மக்களவைத் தேர்தலில் பலமான போட்டியை அளிக்க முடியாமல் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திணறிவருகிறார். இதனால் டெல்லியில் பாஜக - காங்கிரஸ் - ஆம் ஆத்மி என மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் ஆம் ஆத்மி கூட்டணி ஏற்பட்டிருந்தால், பாஜக.வுக்கு எதிரான வாக்குகள் கிடைத்திருக்கும். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது. ஆம் ஆத்மி எவ்வளவோ முயன்றும் காங்கிரஸுடன் கூட்டணி ஏற்படவில்லை. அத்துடன் ஆம் ஆத்மி எம்எல்ஏ.க்கள் 2 பேர் விலகி பாஜக.வுக்கு ஆதரவளித்துள்ளனர்.

கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆம் ஆத்மி அதிர்ச்சி அளித்தது. ஆனால், இப்போது நிலைமை அங்கேயும் சரியில்லை. கட்சிக்குள் கோஷ்டி பூசல் அதிகரித்துள்ளது. ஆம் ஆத்மியில் இருந்து முக்கிய தலைவர் யோகேந்திர யாதவ் விலகிவிட்டார். அத்துடன், ‘‘மக்களவைத் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்காமல், நோட்டாவுக்கு வாக்களியுங்கள்’’ என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனினும், இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் அர்விந்த் கேஜ்ரிவால் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். ‘‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளை, மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துணை நிலை ஆளுநர் நிறைவேற்ற விடாமல் முட்டுக்கட்டை போடுகிறார். எனவே, தேர்தலில் வெற்றி பெற்றால் டெல்லிக்கு முழு மாநில அந்தஸ்து கிடைக்க போராடுவோம்’’ என்று தேர்தல் அறிக்கையில் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

அத்துடன், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தியது உட்பட டெல்லி அரசின் பல்வேறு சாதனைகளை கூறி மக்களிடம் ஆதரவு திரட்டி வருகிறார். டெல்லியில் 7 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி போட்டியிடுகிறது. எனினும், டெல்லி அரசு பள்ளிகளைத் தரம் உயர்த்தியதில் முக்கிய காரணமாக இருந்த அதிஷி மர்லேனா சிங் வெற்றி பெற வேண்டும் என்பதில் கேஜ்ரிவால் கவனம் செலுத்தி வருகிறார். பாஜக வேட்பாளர் கவுதம் காம்பீர் மற்றும் காங்கிரஸ் வேட்பாளர் அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோரை எதிர்த்து கிழக்கு டெல்லி தொகுதியில் அதிஷி போட்டியிடுகிறார்.

அதேபோல் தெற்கு டெல்லி தொகுதிகளில் ராகவ் சத்தாவை களம் இறக்கி உள்ளது ஆம் ஆத்மி. இங்கு பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி மற்றும் காங்கிரஸ் வேட்பாளரும் குத்துச்சண்டை வீரருமான விஜேந்திர சிங்கை எதிர்த்து ராகவ் போட்டியிடுகிறார்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியும் பலமுள்ள வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. வடகிழக்கு டெல்லி தொகுதியில் முன்னாள் முதல்வர் ஷீலா தீட்ஷித் போட்டியிடுகிறார். இங்கு பாஜக சார்பில் டெல்லி மாநில பாஜக தலைவர் மனோஜ் திவாரி போட்டியிடுகிறார். அதேபோல் புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் மீனாட்சி லெகியை எதிர்த்து முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கானை காங்கிரஸ் களம் இறக்கி உள்ளது.

மேலும், 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆம் ஆத்மியிடம் இழந்த டெல்லி ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அதற்காக ஆம் ஆத்மி அரசின் செயல்பாடுகளை முன்வைத்து பிரச்சாரத்தில் ஈடுபட காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற 8 மாதங்கள் உள்ள நிலையில், அதற்கு முதல் நடவடிக்கையாக மக்களவைத் தேர்தலை பயன்படுத்திக் கொள்ள காங்கிரஸ் முடிவெடுத்துள்ளது. அதன் காரணமாகவே டெல்லியில் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க ஷீலா தீட்ஷித் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார் என்கின்றனர்.

கடந்த 2014 தேர்தலில் டெல்லியில் 7 தொகுதிகளையும் கைப்பற்றிய பாஜக, இந்த முறை 5 தொகுதிகளில் மிகவும் பிரபலமானவர்களை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது. முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் தவிர, வடமேற்கு டெல்லி தொகுதியில் பிரபல பஞ்சாபி பாடகர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸை பாஜக வேட்பாளராக அறிவித்துள்ளது. இந்தத் தொகுதி தனித் தொகுதியாகும்.

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அரசின் செயல்பாடுகள், சாதனைகளை கூறி 7 தொகுதிகளையும் கைப்பற்ற பாஜக தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. ஏழு தொகுதிகளையும் கைப்பற்றுவதன் மூலம், 8 மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை ஆட்சியில் இருந்து விரட்டவும் முடியும் என்று பாஜக நம்புகிறது.

Advt:

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close