[X] Close

காவித் துண்டு அணியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டோம்: காங். வேட்பாளரின் பிரச்சாரத்தில் போலீஸார் அதிர்ச்சித் தகவல்


  • kamadenu
  • Posted: 08 May, 2019 11:54 am
  • அ+ அ-

போபால் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் திக்விஜய் சிங் நடத்தும் பிரச்சாரத்தில் காவித் துண்டு அணியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவைத் தொகுதி பாஜகவின் அசைக்க முடியாத கோட்டையாகக் கருதப்படுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக இந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்துள்ளனர்.

இந்நிலையில் மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சாத்வி பிரக்யா சிங் தாக்குர், போபாலில் பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். கடந்த ஏப்ரல் 17-ம் தேதி பாஜகவில் இணைந்த சில மணி நேரங்களில் அவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக காங்கிரஸ் தரப்பில் அந்தக் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் களமிறங்கியுள்ளார்.

துறவி பிரக்யாவை எதிர்கொள்ள சாமியார்களின் ஆதரவை அவர் கோரி வருகிறார். அவர்களில் முக்கியமானவர் 'கம்ப்யூட்டர் பாபா' என் றழைக்கப்படும் நாம்தேவ் தியாகி.

திக்விஜய் சிங்கின் தேர்தல் வெற்றிக்காக 'கம்ப்யூட்டர் பாபா' போபாலில் நேற்று பிரம்மாண்ட யாகம் நடத்தினார். இதில் திக்விஜய் சிங், தனது மனைவியுடன் பங்கேற்றார்.

இந்நிலையில் கம்ப்யூட்டர் பாபா தலைமையில் திக்விஜய் சிங் இன்று (புதன்கிழமை) பிரச்சாரம் செய்து வருகிறார்.

D6BO6boW4AA83ol.jpg 

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக நடந்த சாலை ஊர்வலத்தில் ஏராளமான காவலர்கள், சாதாரண உடையுடன் கலந்துகொண்டனர். அவர்கள் அனைவரும் கழுத்தில் காவித்துண்டு அணிந்திருந்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்கள் கேட்டபோது, ''காவித் துண்டு அணியுமாறு கட்டாயப்படுத்தப்பட்டோம்'' என்று தெரிவித்தனர்.

வரும் 12-ம் தேதி போபால் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close