[X] Close

இந்தியர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்வதை யாரும் தடுக்க முடியாது: மம்தாவுக்கு அமித் ஷா பதிலடி


  • kamadenu
  • Posted: 07 May, 2019 17:09 pm
  • அ+ அ-

இந்தியர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்வதை யாரும் தடுக்க முடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன், மம்தா பானர்ஜியின் கான்வாய் சென்றபோது, 'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிட்ட மூவர் கைது செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி வைரலானது. இதைத்தொடர்ந்து 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் பேசுபொருளானது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலை ஒட்டி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற பேரணியில் நேற்று கலந்துகொண்ட மோடி, ''இப்போதெல்லாம் தீதி மிகுந்த விரக்தியில் இருக்கிறார். அவருக்கு கடவுளைப் பற்றிப் பேசப் பிடிப்பதில்லை. கேட்கக்கூட விரும்புவதில்லை. 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிட்டவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார் மம்தா. 'நானும் ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷமிடுகிறேன். இதனால் என்னையும் அவர் சிறையில் தள்ளட்டும்'' என்று கூறினார்.

இதற்குப் பதிலடி தரும் விதமாகப் பேசிய மம்தா பானர்ஜி, ''பாஜக பாபுவே (சகோதரர்) நீங்கள் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்பீர்கள்; அடுத்தவர்களையும் கூறவேண்டும் என்று கட்டாயப்படுத்துவீர்கள். நீங்கள் விரும்பும் ஸ்லோகங்களைக் கோஷமிடுமாறு மக்களை வலியுறுத்த முடியாது.

நாங்கள் கடவுள் ராமரை மதிக்கிறோம். அவருக்கு முறையாக எப்படி மரியாதை கொடுக்க வேண்டும் என்றும் தெரியும். நான் 'ஜெய்ஹிந்த்' சொல்வேன். 'வந்தே மாதரம்' கூறுவேன். ஆனால் பாஜக என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்ப்பதைக் கூற மாட்டேன்'' என்றார் மம்தா.

இந்நிலையில் கதால் மக்களவைத் தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் இன்று கலந்துகொண்ட அமித் ஷா, இந்தியர்கள் 'ஜெய் ஸ்ரீராம்' சொல்வதை யாரும் தடுக்க முடியாது என்றார்.

அப்போது பேசிய அவர், ''மேற்கு வங்க மக்கள்  'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுவதை மம்தா ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். தன்னுடைய நாட்டுக்காகவும் நாட்டு மக்களுக்காகவும் ஒட்டுமொத்த வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் கடவுள் ராமர். அவரின் பெயரைக் கோஷமிடுவதை எப்படி ஒருவர் நிறுத்த முடியும்?

மம்தா தீதி, உங்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ செய்து கொள்ளுங்கள். இதே மேடையில்,  'ஜெய் ஸ்ரீராம்' என்று கோஷமிடுகிறேன். என் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுங்கள். ஆனால் ஒன்று, நாங்கள் தொன்மையான கலாச்சார பழக்கங்களைப் பின்பற்றுவதை மட்டும் உங்களால் தடுத்து நிறுத்த முடியாது.

உங்களிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன். கடவுள் ராமரின் பெயரை இந்தியாவில் கூறாமல் பாகிஸ்தானிலா கூறமுடியும்?

மேற்கு வங்கத்தின் 23 மக்களவை சீட்டுகளை மோடியிடம் கொடுத்துப் பாருங்கள். மம்தா மற்றும் அவரின் கட்சியினர் செய்யும் அட்டூழியங்கள் தானாக மறைவதைப் பார்ப்பீர்கள்'' என்றார் அமித் ஷா.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close