[X] Close

நன்றி மறக்கவில்லை: கேரள வெள்ளத்தில் முதுகைப் படியாக மாற்றி மக்களைக் காப்பாற்றிய மீனவருக்கு மறக்க முடியாத பரிசு


  • kamadenu
  • Posted: 07 May, 2019 14:17 pm
  • அ+ அ-

கேரளாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின் போது, படகில் பெண்கள் ஏற முடியாமல் தவித்த நிலையில், தன் முதுகைப் படியாக மாற்றி ஏற்றிவிட்ட மீனவருக்கு, மறக்க முடியாத பரிசாக ரூ.16 லட்சத்தில் புதிய வீடு அளிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து தொடரந்து 10 நாட்களுக்கு மேல் பெய்ததால் மாநிலத்தின் பெரும்பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான நல்ல உள்ளம் படைத்த மக்கள், மீனவர்கள் வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு மக்களை மீட்டனர்.

இதில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர் கே.பி.ஜெய்சல் செய்த செயல் நாடு முழுவதும் மிகப்பெரிய பாராட்டுகளைப் பெற்றது.

மலப்புரம் வெங்காரா பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது, பெண்கள் படகில் ஏற முடியாமல் சிரமப்பட்டனர். அப்போது, மீனவர் ஜெய்சல் தண்ணீருக்குள் முழங்கால் இட்டு அமர்ந்து, தனது முதுகைப் படியாக மாற்றி பெண்கள் படகில் ஏற உதவினார். இந்தக் காட்சி சமூக ஊடகங்களில் வைரலாகி பாராட்டுகளைப் பெற்றது.

kera.PNG 

மீட்புப் பணிகள் முடிந்த பின் மகேந்திர நிறுவனம் ஜெய்சலுக்கு கார் பரிசாக அளித்தது. பலரும் அவருக்குப் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில், கேரள வெள்ளம் வந்து சென்று ஓராண்டு நிறைவடைய உள்ள நிலையில், ஜெய்சல் செய்த உதவியை மறக்காமல் அவருக்கு ஒரு வீடு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.

மலப்புரத்தில் உள்ள சன்னி யுவஜனா சங்கம் (எஸ்ஒய்எஸ்) எனும் இளைஞர் அமைப்பு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் செப்பனிட்டு, புதிதாக மாற்றும் பணியில் ஈடுபட்டு வந்தது. இந்த அமைப்பு, மலப்புரம் பரப்பனங்காடி அருகே ஆவில் கடற்கரை அருகே சிறிய இடத்தை விலைக்கு வாங்கி, அங்கு ஒரு வீட்டைக் கடந்த 7 மாதங்களாகக் கட்டியது.

2 படுக்கை அறை, இரு மாடிகள் கொண்ட அந்த வீட்டின் மதிப்பு ரூ.16 லட்சமாகும்.  அந்த வீடு கட்டி முடிக்கப்பட்ட பின் கடந்த சில நாட்களுக்கு முன் சன்னி யுவஜனா அமைப்பு, மீனவர் ஜெய்சலுக்கு அந்த வீட்டைப் பரிசாக வழங்கியது. வெள்ளத்தில் மக்களை மீட்டதற்கு நன்றியாக வீட்டை வழங்குவதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

இது குறித்து மீனவர் ஜெய்சல் கூறுகையில், "என்னுடைய கனவு நனவாகி இருக்கிறது. திடீரென்று வீடு பரிசாகக் கிடைத்ததை நம்ப முடியவில்லை" எனத் தெரிவித்தார்.

எஸ்ஒய்எஸ் அமைப்பின் தலைவர் ஜமால் கருளை கூறுகையில், "சாந்தவண்ணம் பகுதியில் ஏற்கெனவே நாங்கள் புனரமைப்புப் பணிகளைச் செய்து வருகிறோம். ஜெய்சலின் உதவி குறித்து மக்களிடம் தெரிவித்து,  நிதி திரட்டினோம். எங்களிடம் இருந்த நிதியையும் சேர்த்து ஜெய்சலுக்கு வீடு கட்டிக்கொடுத்தோம்" என்றார்.

 

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close